வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (01/12/2017)

கடைசி தொடர்பு:15:21 (01/12/2017)

``பெண்களின் நிலை உயர்ந்தால் நாடு தானாக உயரும்!" அமைச்சர் பேச்சு!

 

"பெண்களின் நிலை உயர்ந்தால் அந்த நாடு தானாக உயரும்" என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.

கரூர் மாவட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர், மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.2.18 கோடி மதிப்பில் மாதாந்திர உதவித்தொகைக்கான உத்தரவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் வழங்கினார்.

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், "மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைப் போல் வாழவேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வந்தார். அதன்படி, தமிழ்நாடு அரசு ரூ.500 என்றிருந்த முதியோர் உதவித் தொகையை ரூ.1000-மாக உயர்த்தி வழங்கிவருகிறது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் 27,864 பேர் ஒவ்வொரு மாதமும் பயன்பெற்று வருகின்றனர். இன்று நடைபெற்ற விழாவில் 182 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் டிசம்பர்-2017 முதல் வரவு வைக்கப்படும். 

தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்தில் தனிக் கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ஏழை, எளிய பெண்களின் திருமணத்துக்கு நிதிஉதவி மற்றும் திருமாங்கல்யத்துக்குத் தேவையான தங்கத்தை 4 கிராமிலிருந்து, 8 கிராமாக உயர்த்தி வழங்கிவருகிறது. அத்துடன், விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை பெண்களின் வேலைப் பழுவை குறைப்பதற்காக இந்த அரசு வழங்கி உள்ளது. பெண்களின் நிலை உயர்ந்தால் அந்தநாடு உயரும் என்ற உன்னத எண்ணத்தில் பெண்களுக்காகவே இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தபட்டுவருகிறது. தமிழகத்தில் 1 கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ விலையில்லா அரிசியை வழங்கி ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியை இந்த அரசு போக்கி வருகிறது" என்று பேசினார்.