வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (01/12/2017)

கடைசி தொடர்பு:15:56 (01/12/2017)

`இப்போது நான் இரட்டைக்குழல் துப்பாக்கி!' - தேர்தல் ஜோரில் மதுசூதனன்

அ.தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல்செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மதுசூதனன், `இரட்டை குழல் துப்பாக்கி போல் இப்போது இருக்கிறேன். அதனால், கண்டிப்பாக வெற்றிதான்' என்று கூறியுள்ளார்.

ஜெயக்குமாருடன் மதுசூதனன்

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மதுசூதனன், `இப்போது நான் இரட்டைக் குழல் துப்பாக்கி. அதனால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது' என்று கூறியவரிடம், `தினகரனுக்கு ஆர்.கே.நகர் வாக்காளர்கள் மத்தியில் சென்ற இடைத்தேர்தலில் இருந்தே பெரிய ஆதரவு இருந்தது. இப்போதும் பெரும் திரளான மக்கள் அவருக்காக கூடினர். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்' என ஒருவர் கேட்க, `அவருடைய கனவுகள் நிறைவேறட்டும்' என்று பதிலளித்தார். உடனேயே மதுசூதனனை இடைமறித்துப் பேச ஆரம்பித்த ஜெயக்குமார், `இது ஒரு தடைசெய்யப்பட்ட பகுதி. இங்கு ஐந்து பேருக்கு மேல் வரவே கூடாது.

ஆனால், தினகரன் ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக இங்கு கூடியுள்ளனர். எங்கள் தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டபோதும், அவர்களை இங்கு வர வேண்டாம் என்று கூறி அனுப்பிவிட்டோம். ஆனால், அவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக நடந்துள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுப்போம்' என்றவர் தொடர்ந்து, `அ.தி.மு.க கட்சிக் கொடியை தினகரன் தரப்பினர் பயன்படுத்துவது தவறு. அதற்கு அவர்களுக்கு உரிமையே கிடையாது. எம்.ஜி.ஆரின், ஜெயலலிதாவின் சின்னத்துக்கு எதிராக களமிறங்கும் தினகரன், கொடியைப் பயன்படுத்துவதற்கு என்ன உரிமை இருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் இதுகுறித்து முறையிடுவோம்' என்று முடித்துக்கொண்டு கிளம்பினார்.