வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (01/12/2017)

கடைசி தொடர்பு:17:38 (01/12/2017)

`எதிரிகளுக்கு பாடம் கற்பிப்போம்!' - ஆர்.கே.நகரில் தகித்த தினகரன்

வருகிற 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துவரும் நிலையில், அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து தனித்துப் போட்டியிடும் தினகரன் இன்று தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவைத் தாக்கல்செய்தார். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், `கிடைக்கும் சின்னத்தைவைத்து தேர்தலில் போட்டியிட்டு எதிரிகளுக்கு பாடம் கற்பிப்போம்' என்று தெரிவித்துள்ளார்.

தொண்டர்களுக்கு மத்தியில் தினகரன்

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், `எந்தச் சின்னம் ஒதுக்கப்பட்டாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். கிடைக்கும் சின்னத்தை வைத்து எங்கள் எதிரிகளை எதிர்வரும் இடைத்தேர்தலில் தோற்கடித்துப் பாடம் கற்பிப்போம். ஜெயலலிதா, இரட்டை இலைச் சின்னத்தின் கீழ்தான் தேர்தல்களில் போட்டியிட்டார். அது மக்களுக்கு எதிரான இந்தத் துரோக அரசாங்கத்திடம் இருக்கக் கூடாது. விரைவில் இரட்டை இலையை மீட்போம்' என்று கூறியுள்ளார். தி.மு.க சார்பில் மருது கணேஷும் அ.தி.மு.க சார்பில், அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனனும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.