வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (01/12/2017)

கடைசி தொடர்பு:16:40 (01/12/2017)

ஐந்தாவது நாளாக நீடிக்கும் மருத்துவ மாணவர்கள் போராட்டம்!

மருத்துவ கல்லூரி

மதுரை அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டதை இன்று ஐந்தாவது  நாளாகத் தொடர்ந்து வருகின்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மனிதச் சங்கிலி அமைத்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். மருத்துவப் பணியில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனியார் மருத்துவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முறைகேடாக நடந்த மருத்துவர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் முறைகேடாக நடத்தப்பட்ட நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பினர்.

மேலும் 69% இட ஒதுக்கீடு முறையைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி முதுநிலை மருத்துவ மாணவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 4 வது நாளாக மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து மதுரை அண்ணா பேருந்து நிலையம் வரையில் கோசங்கள் எழுப்பி  ஊர்வலமாகச் சென்று மீண்டும் மருத்துவமனை வந்தடைந்தனர். இன்று மருத்துவமனை முன் மனித சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களது கோரிக்கை நிறைவேறும் வகையில் தங்களது போராட்டம் தொடரும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.