வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (01/12/2017)

கடைசி தொடர்பு:15:33 (01/12/2017)

’’நீங்கள் 'பார்'களை மூடினால், நாங்கள் டாஸ்மாக் கடைகளை மூடுவோம்..!’’ அரசை எதிர்க்கும் பார் உரிமையாளர்கள்

டாஸ்மாக்

துக்கடைகளை மூடச்சொல்லி கடந்த பல வருடங்களாகத் தமிழக மக்கள் போராடிவருகின்றனர். அதனால் ஏற்பட்ட போராட்டங்களும்... காவல் துறையின் அடக்குமுறைகளும் ஏராளம். அப்போதெல்லாம் மதுக்கடை மற்றும் பார்களை மட்டும் அல்ல, அதிலிருந்து ஒரு செங்கல்லைக்கூட எடுக்க மறுத்தது அரசு. ஆனால், தற்போது பார்களை அரசே மூட உத்தரவிட்டுள்ளது. பார்கள் மூடப்பட்டால் டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று பார் உரிமையாளர்கள் அறிவித்துள்ளார்கள். டாஸ்மாக் கடைகளை நம்பித்தான் தமிழக அரசே இயங்கி வருகிறது. இந்த நிலையில், டாஸ்மாக் மற்றும் பார் மூடப்படுவது என்பது எப்படிச் சாத்தியம்?

பார் உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே மது விற்பனையில் 2.5 சதவிகிதம் வரி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தீபாவளிக்குப் பிறகு, மது விற்பனையின் அளவு அதிகரித்ததால், பார் உரிமையாளர்களுக்கு 2.5 சதவிகிதமாக இருந்த வரியை 3 சதவிகிதமாக உயர்த்த அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிலையில், 2018-ம் ஆண்டுக்கான டாஸ்மாக் கடைகளில் பார் நடத்துவதற்கான ஒப்பந்த அறிவிப்பை டாஸ்மாக் டாஸ்மாக் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை.நிர்வாகம் சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இது, நடப்பு ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி அன்பரசன்வரைக்கான உரிம ஒப்பந்தமாகும். 3 சதவிகித வரியை எதிர்த்து டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை, நவம்பர் 23-ம் தேதி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனால் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூட்டத்தில், ''நடக்கவிருக்கும் பார் டெண்டர்களில் பார் உரிமையாளர்கள் யாரும் கலந்துகொள்ளக்கூடாது'' என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 24 மற்றும் 29-ம் தேதிகளில் பார் டெண்டர் நடைபெற்றது. ஆனால், பார் உரிமையாளர்கள் யாரும் அதில் கலந்துகொள்ளாததால் டெண்டர் நடைபெறவில்லை. இதனால் டாஸ்மாக் நிர்வாகம், ''அனைவரும் பார் டெண்டரை எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால், பார்களை டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் மூடிவிடுவோம்'' என்று உத்தரவிட்டது. இருப்பினும், பார் உரிமையாளர்கள் தங்களின் முடிவில் மாறாமல் இருந்தனர். இதனால், இன்றுமுதல் (1-12-2017) பார்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாகத் தமிழ்நாடு டாஸ்மாக் பார் மற்றும் மதுக்கூட கட்டட உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பரசனிடம் பேசியபோது, "ஏற்கெனவே உள்ள 2.5 சதவிகித வரியே அதிகம். அதை 1.5 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என்று நாங்கள் போராடி வருகிறோம். இதில் 3 சதவிகித வரி என்பது ஒருபோதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. 2.5 சதவிகித வரிக்கே தண்ணீர் பாக்கெட், சுண்டல் போன்ற பொருள்களுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பாருக்கு மதுகுடிக்க வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதில் மூன்று சதவிகித வரி ஏற்றினால் என்ன ஆவது? இதை எதிர்த்துத்தான் பார் டெண்டர்களில் நாங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்றிரவு அரசுத் தரப்பிலிருந்து எங்களுக்கு வந்த உத்தரவில், 'இரண்டு முறை டெண்டர் நடத்தியும் நீங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. அதனால், டிசம்பர் 18-ம் தேதி டெண்டரில் கட்டாயமாகக் கலந்துகொள்ள வேண்டும். இதுவரை செலுத்தவேண்டிய தொகையையும் செலுத்த வேண்டும். அதுவரை டாஸ்மாக் பார்கள் மூடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஒவ்வொரு பார் உரிமையாளர்களின் வைப்பு நிதியே டாஸ்மாக் நிர்வாகத்திடம் மூன்று லட்சம் ரூபாயிலிருந்து பல லட்சம் ரூபாய் வரை உள்ளது. அந்தப் பணத்தை எங்களிடம் டாஸ்மாக் நிர்வாகம் தரவில்லை. பார் டெண்டர் எடுக்கவேண்டுமானால், 1.5 சதவிகித வரியை டாஸ்மாக் நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதைக் கோரிக்கையாகவைத்து இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திக்க பார் உரிமையாளர்கள் சங்கத்திலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் செல்கிறோம். எங்கள் கோரிக்கையை ஏற்றால், டிசம்பர் 18-ம் தேதி நடக்கும் டெண்டரில் அனைவரும் கலந்துகொள்வோம். இல்லையென்றால், பார் உரிமையாளர்கள் யாரும் கலந்துகொள்ளமாட்டோம்.

பார் உரிமையாளர்கள் சங்கத்தினர்

பார் உரிமையாளர்கள் சங்கத்தினர்

தற்போது தமிழ்நாட்டில் இயங்கிவரும் சுமார் 2,600-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள், பார் உரிமையாளர்களின் இடங்களில்தான் செயல்பட்டு வருகின்றன. அந்த இடத்துக்கு மிகக் குறைந்த அளவு வாடகையைத்தான் அரசு எங்களுக்குக் கொடுத்துவருகிறது. அதற்கென்று தனியாக ஒப்பந்தம்கூட அரசு போடவில்லை. தற்போது பார்களை அரசு மூடினால், பார் உரிமையாளர்கள் அவர்களின் சொந்த இடங்களில் இருக்கும் மதுக்கடைகளைத் தமிழகம் முழுவதும் மூடுவோம். எங்களுக்கு எங்கள் இடம் வேண்டும். அந்த இடத்தைவைத்து நாங்கள் வேறு ஏதாவது தொழில் செய்துகொள்கிறோம். இன்று முடிவு எட்டப்படவில்லை என்றால், எங்கள் இடங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடுவோம். இதனால் எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும், அரசை எதிர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.

பல போராட்டங்கள் நடத்தியும் மக்களால் மதுக்கடைகளை மூட முடியவில்லை. இப்படி ஏதாவது பிரச்னை தலைதூக்கி டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக  இருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்