ராகு காலத்துக்குப் பின் மனுத்தாக்கல் செய்த மருதுகணேஷ், தினகரன்!

ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் மனுத்தாக்கல் செய்யவந்த வி.ஐ.பி வேட்பாளர்கள் பகல் 12 மணிக்குப் பின்னரே மனுத்தாக்கல் செய்யும் அலுவலகத்தின் உள்ளே வந்தனர்.

மூன்று முக்கிய வேட்பாளர்கள்

வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிவரை ராகுகாலம் இருப்பதால் வேட்பாளர்கள் 12 மணிக்குப் பின்னரே வருவார்கள் என்று போலீஸாரும் அறிந்து வைத்திருந்தனர். சரியாக 11.30 மணிக்கு தடுப்புக் கயிறுகளுடன் மனுத்தாக்கல் மையத்தை போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். தொகுதியின் வி.ஐ.பி வேட்பாளர் வரிசையில் தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் முதல் நபராக மனுத்தாக்கல் செய்தார். அவருடன் எம்.எல்.ஏ-க்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.பி.சாமி, பி.கே.சேகர்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ எர்ணாவூர் நாராயணன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.திரவியம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி ஆகியோர் வந்திருந்தனர். அடுத்ததாக டி.டி.வி.தினகரன் மனுத்தாக்கல் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், `தொப்பி சின்னம் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். இரட்டை இலைச் சின்னம் இப்போது விரோதிகளிடம் இருக்கிறது. அதற்கே அம்மாவின் சாபம் அவர்களை சும்மாவிடாது. தொகுதிக்காக நான் முன்பு கொடுத்த அதே வாக்குறுதியை நிறைவேற்றுவேன். மக்கள் என்னை தீவிரமாக ஆதரிக்கிறார்கள். அதை எதிரிகள் பார்க்கும் நாளாக முடிவுகளை அறிவிக்கும் வெற்றிநாள் அமையும்' என்றார்.

மூன்றாவதாக அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன் மனுத்தாக்கல் செய்தார். அமைச்சர் ஜெயகுமார், எம்.பி வெங்கடேஷ்பாபு, மாவட்டச் செயலாளர் நா.பாலகங்கா, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் உடன் வந்தனர். துணை முதல்வர், முதல்வர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த அ.தி.மு.க தொண்டர்கள் பெரிதும் ஏமாந்தனர். போலீஸாரும் போக்குவரத்து கெடுபிடிகளை இதன் பின்னர் தளர்த்திக் கொண்டனர். வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய வரும்போதெல்லாம் போலீஸ் கூடுதல் கமிஷனர் ஹெச்.எம்.ஜெயராம் தலைமையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!