வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (01/12/2017)

கடைசி தொடர்பு:17:20 (01/12/2017)

குறுக்குத்துறை முருகன் கோயிலை மூழ்கடித்த வெள்ளம்! - திணறும் நெல்லை

தமிரபரணி வெள்ளம்

நெல்லையில் பெய்துவரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறுக்குத்துறை முருகன் கோயிலை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்கிறது.

நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் சுமார் 30,000 கன அடி தண்ணீர் செல்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் உள்ளே இருக்கும் குறுக்குத்துறை முருகன் கோயிலை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்து வருகிறது. தமிழகத்திலேயே அதிகப்பட்சமாகப் பாபநாசம் அணைப் பகுதியில் 45 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது.

அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கருப்பாநதி அணை, கடனாநதி அணை, குண்டாறு அணை, கொடுமுடியாறு அணை ஆகியவை நிரம்பி வழிகின்றன. அனுமன்நதி, நம்பியாறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால், பணகுடியில் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. குடியிருப்புப் பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வாழை சேதம்

சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, வாழை விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் வாழைகள் காற்றில் சரிந்ததால் விவசாயிகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது, பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்களும் காற்றின் வேகத்துக்குத் தப்பவில்லை. பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

நெல்லை டவுனையும் மேலப்பாளையம் பகுதியையும் இணைக்கும் கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் வெள்ளம் அதிகமாக வந்ததால் பாலம் மூழ்கியது. தரைப்பாலம் மூழ்கியதால் மேலப்பாளையத்திலிருந்து கருப்பந்துறை வழையாக நெல்லை டவுனுக்குச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. இதையடுத்து எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் அந்தப் பாலத்தின் நீர் செல்லும் வழியை அடைத்துக் கிடந்த மரங்கள், குப்பைகளை அகற்றினார்கள். ஆனாலும், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

குறுக்குத்துறை முருகன்

மேலப்பாளையத்தின் ஹேப்பி காலனி, குலவணிகர்புரம் பகுதியில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள். தாமிரபரணியின் சீவலப்பேரி ஆற்றுப்பாலமும் மூழ்கியது. அந்த இடத்தில் ஆற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆற்று நீரின் வேகத்தைப் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்வையிட்டனர். ராதாபுரம் பகுதியில் கண்ணன்குளம் அருகில் உள்ள கிராமங்களின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

வள்ளியூர் துலுக்கர்குளம் உடைந்து தண்ணீர் வெளியேறியது. அந்தக் குளத்தைப் பொதுமக்களே அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் கரையை அடைக்க முடியாமல் திணறி வருகிறார்கள். குளத்தின் தண்ணீர் ஆனைக்குளம் செல்லும் சாலையைத் துண்டித்ததால் மக்கள் கிராமத்தைவிட்டு வெளியேற வழியின்றி தவித்து வருகின்றனர். நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி குளமும் உடைந்து தண்ணீர் வயலுக்குள் புகுந்ததால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன.