வெளியிடப்பட்ட நேரம்: 16:38 (01/12/2017)

கடைசி தொடர்பு:16:38 (01/12/2017)

'ஜெயலலிதா ஸ்டைலில் ஆர்.கே.நகர் தேர்தல் வியூகம்!' - பன்னீர்செல்வம், பழனிசாமியின் திட்டம்

 ஆர்.கே.நகர்

ஜெயலலிதா ஸ்டைலில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் திட்டமிட்டுள்ளனர். பிரசாரத்துக்காகத் தமிழகத்திலிருந்து அ.தி.மு.க.வினர் வரவழைக்கப்படவுள்ளனர். 

ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில், அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் டி.டி.வி.தினகரன் களமிறக்கப்பட்டார். சசிகலாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்த ஓ.பன்னீர்செல்வத்தின் அணி சார்பில் மதுசூதனன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதனால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த புகாரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 

காலங்கள் உருண்டோடின. சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போர்க்கொடி தூக்கினார். பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன. சின்னமும், கட்சியும் மீண்டும் பழனிசாமி, பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. அதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார் தினகரன். 
 இதற்கிடையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ம.ம.க. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இரட்டை இலைச் சின்னத்தை எதிர்த்து டி.டி.வி.தினகரன் சுயேட்சையாகக் களமிறங்குகிறார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, பா.ஜ.க., நாம்தமிழர் கட்சி ஆகியவை போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 

ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டியிட்ட போது, தமிழகத்திலிருந்து கட்சியினர் பிரசாரத்துக்காக வரவழைக்கப்பட்டனர். அடுத்து, டி.டி.வி.தினகரன், தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட சமயத்திலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது, குறிப்பிட்ட வீடுகளுக்கு ஒரு தேர்தல் பொறுப்பாளர் நியமித்து, பிரசாரத்தையே அமர்க்களப்படுத்தினர். பணமும், பரிசுப் பொருள்களும் வாக்காளர்களுக்குத் தங்குத் தடையின்றி விநியோகிக்கப்பட்டதாக எதிர்க்கட்சியினர் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது. அதன்பேரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 
தற்போது, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த வேட்பாளர் மதுசூதனனை எதிர்த்து தினகரன் மீண்டும் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் தினகரனுக்குத் தக்கப் பாடம் கற்பிக்க வேண்டும் என்ற மனநிலையில் பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பினர் உள்ளனர். அதே நேரத்தில் தங்களுடைய செல்வாக்கை நிரூபித்து வெற்றிபெறும் கட்டாயத்தில் சசிகலா தரப்பினர் உள்ளனர். இதனால் ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் தினகரன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆர்.கே.நகர்

 
 ஏற்கெனவே பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பினருக்கு இடையே கருத்துவேறுபாடு நிலவிவருகிறது. அதன்எதிரொலி தேர்தல் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்திட கூடாது என்று பழனிசாமி, பன்னீர்செல்வம் கவனமாக இருக்கின்றனர். இதனால் அவர்கள் இருவரும் மதுசூதனனுக்கு எதிராக செயல்பட்டவர்கள், அணியில் கருத்துவேறுபாடுள்ளவர்கள் என அனைவரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, மதுசூதனனின் வெற்றிக்காக அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். உள்ளடி வேலையில் யார் ஈடுபட்டாலும் கட்சி ரீதியான நடவடிக்கைகள் அவர்கள்மீது பாயும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே மதுசூதனனுக்கு எதிராக செயல்பட்ட கட்சியினர் சமரசமடைந்துள்ளனர். 
ஜெயலலிதா ஸ்டைலில் ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர்கள் அழைத்துவர வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற உள்ள ஜெயலலிதா நினைவு தின அமைதிப் பேரணிக்கு வரும் நிர்வாகிகள், பிரசாரத்துக்கும் தயாராக வர வேண்டும் என்று கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. மேலும் ஆர்.கே.நகரில் போட்டியிடுவது மதுசூதனன் அல்ல ஜெயலலிதா என்ற மனநிலையோடு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் கருதி அ.தி.மு.க. வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று தகவல் சொல்லப்பட்டுள்ளது. வெளியூர்களிலிருந்து வரும் நிர்வாகிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்ய மூத்த அமைச்சர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

 இதற்கிடையில் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களையும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரசாரத்தில் சசிகலா குடும்பத்தினரை விமர்சிக்க அதுதொடர்பான தகவல்களை ஒருதரப்பினர் சேகரித்து வைத்துள்ளனர். சசிகலா குடும்பத்தினரின் ஸ்லீப்பர் செல்களாக கருதப்பட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகளைக் கொண்டே தினகரனுக்கு பதிலடி கொடுக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியினரின் தேர்தல் வியூகத்தை தினகரன் தரப்பில் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   


டிரெண்டிங் @ விகடன்