வெளியிடப்பட்ட நேரம்: 21:42 (01/12/2017)

கடைசி தொடர்பு:21:42 (01/12/2017)

இந்தியாவின் பொருளாதார நிலை இருக்கட்டும்... மோடி குடும்பத்தின் பொருளாதார நிலை எப்படி?

`பாரதப் பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்றபிறகு, இந்தியப் பொருளாதாரம் உயரவில்லை' என்பது பரவலாக வைக்கப்படும் குற்றச்சாட்டு. `பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி போன்றவை பொருளாதாரத்தை மந்தமாக்கிவிட்டன' என்கின்றனர் எதிர்க்கட்சியினர். சரி... மோடி பிரதமரான பிறகு, அவரின் குடும்பத்தினரின் சொத்துமதிப்பாவது உயர்ந்திருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. இதைக் குற்றச்சாட்டு என்று சொல்லலாமா, பெருமையாகக் கொள்ளலாமா கட்டுரையைப் படித்துவிட்டு நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்.

2014-ம் ஆண்டு இந்தியப் பிரதமராக மோடி பொறுப்பேற்றார். முன்னதாக 2001-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை, குஜராத் முதலமைச்சராக மூன்று முறை இருந்தார். ஆனால், மோடியின் சொந்தபந்தங்கள் இப்போதும் சாதாரண ஓட்டு வீட்டில்தான் வசித்துவருகின்றனர். அவரின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவரின் மாத வருமானம் 5 ஆயிரம் ரூபாய்தான்!

பிரதமர் மோடியின் தாய்

தாமோதரதாஸ் மோடி - ஹீராபென் தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த மோடிக்கு, இரு சகோதரர்கள். மூத்த சகோதரர் பெயர் சோமா பாய். இளைய சகோதரர் பிரகலாத் மோடி. வசந்திபென் என்கிற சகோதரியும் உண்டு. சகோதரியை இதுவரை மீடியாக்களில் கண்டதே இல்லை. 2001-ம் ஆண்டு குஜராத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போதிருந்து, சோமா பாய் வத் நகரில் ஏழை மக்களுக்காக முதியோர் இல்லம் நடத்திவருகிறார். அதே ஆண்டில்தான் மோடியும் குஜராத் முதலமைச்சரானார். சகோதரர் கவுன்சிலராகப் பதவிக்கு வந்தாலே ஆட்டம் போடுபவர்களுக்கு மத்தியில், சோமா பாய் `பிரதமரின் சகோதரர்' என்றுகூட சொல்லிக்கொள்வதில்லை. குஜராத் முதலமைச்சராக 13 ஆண்டுகள் மோடி இருந்தபோதும், சகோதரியிடம் சென்று சோமா பாய் எந்த உதவியும் கேட்டதில்லை; அவரும் செய்ததில்லை. ரத்ததான முகாம், கண் சிகிச்சை முகாம் போன்ற சமுதாயப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார் சோமா பாய். 

பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று, இவரைப் பேட்டி எடுக்க முயன்றது. ``என்னைப் போன்று ஏராளமானோர் முதியோர் இல்லம் நடத்திவருகின்றனர். பிரதமரின் சகோதரர் என்பதால்தானே என்னிடம் பேட்டி கேட்கிறீர்கள், இதற்காகப் பேட்டி கொடுத்தால் என் சகோதரரின் நோக்கம் பாழாகிவிடும். சகோதரரின் அதிகாரத்தையோ, பதவியையோ துஷ்பிரயோகம் செய்ய நான் விரும்பவில்லை'' என்று பதிலளித்துள்ளார். 

பிரகலாத் மோடிவத் நகரில் உள்ள ரயில் நிலையத்தில்தான் பிரதமரின்  தந்தை தாமோதரதாஸ் டீக்கடை வைத்திருந்தார். இந்த ரயில்நிலையத்தில்  டீ விற்றதாக மோடி அடிக்கடி கூறுவார். வத் நகரைச் சுற்றிச் சுற்றி மோடியின் சொந்தங்கள் வசிக்கின்றன. அவர்கள் எல்லாம் சாதாரண சம்பளம் வாங்கிக்கொண்டு குடும்பத்தை ஓட்டும் ரகம்தான். 

மோடியின் ஒன்றுவிட்ட சகோதரர் அசோக் பாய், ஆசிரமம் ஒன்றில் சமையல்காரராகப் பணிபுரிகிறார். இவரின் மனைவி, விமலாபென் பாத்திரம் கழுவுகிறார். இந்தத் தம்பதிக்கு மாதம் 9 ஆயிரம் ரூபாய் ஊதியமாகக் கிடைக்கிறது. இவர்களுக்கு, ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். இந்தச் சொற்ப சம்பளத்தில்தான் குடும்பம் ஓடுகிறது. விழாக்காலங்களில் வீட்டையொட்டி பட்டாசுக் கடை வைத்து விற்பனை செய்து, அதில் கொஞ்சம் வருமானம் ஈட்டுகிறார்கள். மற்றபடி இவர்களின் பொருளாதாரமும் மந்தநிலைதான். தன் மகளின் திருமணத்தில் தன் சகோதரர் பங்கேற்க வேண்டும் என்பது மட்டுமே அசோக் பாயின் ஆசை. 

குஜராத்தில் தற்போது தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதால் மீடியா என்றாலே மோடி குடும்பத்தினருக்கு அலர்ஜி. `நாங்களும் 125 கோடி இந்தியர்களைப் போன்றோர்தான். தேவையில்லாத கவனம் எங்கள் மீது தேவையில்லை' என்பதே அவர்களின் எண்ணம். பிரதமரின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி, குஜராத் அரசில் பணிபுரிந்தவர். அகமதாபாத்தில் உள்ள மூன்று அறைகள் கொண்ட வீட்டில் தாயார் ஹீராபென்னுடன் வசித்துவருகிறார். பிறந்த நாள், தீபாவளி போன்ற முக்கிய தினங்களில் இந்த வீட்டுக்கு வந்து, தாயிடம் ஆசி பெறுவதை மோடி வழக்கமாகக் கொண்டுள்ளார். பிரதமரின் வீட்டிலிருந்து அரசியல் கருத்து பிரகலாத் மோடியிடமிருந்து மட்டும்தான் வரும். மற்ற யாரும் அரசியல் தொடர்பாக வாய் திறப்பதில்லை. அகமதாபாத்தில் வசித்துவரும் மற்றோர் ஒன்றுவிட்ட சகோதரர் அம்ருத்பாய் ஃபிட்டராக இருந்து ஓய்வுபெற்றவர். இந்தக் குடும்பமும் சாதாரண ரகம்தான்.

சோமாபாய்

Photo Courtesy: India Today

ஒருமுறை முதலமைச்சராக பதவி வகித்தாலே ஐந்து தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துவிடும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், மூன்று முறை முதலமைச்சராக இருந்தும், பிரதமராக உயர்ந்தும் மோடி குடும்பத்தின் பொருளாதாரப் பின்புலம் இவ்வளவுதான் என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

கட்டுரையின் முதல் பத்தியில் கேட்ட கேள்விக்குப் பதில் கிடைத்ததா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்