"செடி வெச்சா மரமாக்கியே தீரணும்..!" - மரம் நடும் கரூர் இளைஞர்களுக்கு உதவி செய்யும் அமைச்சர்


 மரம்

கரூர் மாவட்டத்தையே பசுமையாக்கும் நோக்கில்,'கானகத்தில் கரூர்' என்று மாவட்டம் முழுக்க ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு, அவை அனைத்தையுமே மரமாக்கும் முனைப்பில் இறங்கியிருக்கிறார்கள் இளைஞர்கள் சிலர். அதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவு கொடுக்க, இளைஞர்கள் புது உத்வேகத்தோடு மரம் வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள்.


 கரூர் இளைஞர்கள்

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ள சின்னவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அதன்மூலம் ஒத்தச் சிந்தனை கொண்ட இளைஞர்களை ஒன்றிணைத்து, கடந்த ஒன்றரை வருடங்களாக திருமண நிகழ்வுகள், பிறந்தநாள் விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகள் வழங்கி வருகிறார். அதோடு, நண்பர்களோடு காரில் போய்,கரூர் மாவட்டம் முழுக்க மரக்கன்றுகள் வளர்க்க தோதான இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்துவிட்டு, அங்கிருப்பவர்களிடம் அதைப் பராமரிக்கும்படி சொல்லிவிட்டு வந்துவிடுவார். ஆனால், அதில் பல மரக்கன்றுகள் கருகியும், அழுகியும் மடிந்து போக,'இனி சும்மா மரக்கன்றுகள் வைத்தால் போதாது. பத்து மரக்கன்றுகள் வைத்தாலும், அவற்றை முழுவதும் மரமாக்கும் வரை மெனக்கெடுவது' என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அதற்காக, 'பசுமை கரூர்', 'இயற்கையைக் காப்போம்' என்ற வாட்ஸ்அப் , ஃபேஸ்புக் குரூப்புகளை ஆரம்பித்து, கரூர் மாவட்டம் முழுக்க உள்ள மரக்கன்றுகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைத்திருக்கிறார். அவர்கள் மூலமாக கடந்த ஆறு மாதமாக ஐந்நூறுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வைத்து, பரமாரித்து வருகிறார். அவற்றில் ஒன்றுகூட வீணாகாமல், அனைத்தும் வளர்ந்து வருகிறது என்பதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விசயம்.


 கரூர் இளைஞர்கள்

அதோடு, விதைப்பந்துகள் செய்வதைப் பற்றி பயிற்சி எடுத்து வந்த இவர், மற்ற நண்பர்களுக்கும் அதுபற்றிய பயிற்சியைக் கொடுத்திருப்பதோடு, எல்லோரையும் கொண்டு தேவையான விதைப்பந்துகளைத் தயார் செய்கிறார். வாரத்திற்கு ஒருதடவை மாவட்டம் முழுக்க காரில் விதைப்பந்துகளோடு சுற்றி வந்து, விதை போடுவதற்கு ஏற்ற இடங்களில் விதைப்பந்துகளை வீசிவிட்டு வருகிறார். இந்தச் சூழலில்தான் இந்த இளைஞர்களின் செயல்பாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கவனத்திற்கு போக, 'நல்ல விசயம். கரூர் மாவட்டமே சுண்ணாம்பு மண் கலந்த மழைபொழிவு குறைவாகக் கொண்ட மாவட்டம். அதனால், மாவட்டத்தையே பசுமையாக்க வேண்டிய அவசர அவசியத்தில் இருக்கிறோம். நீங்கள் மாவட்டம் முழுக்க ஒரு லட்சம் மரக்கன்றுகளை வைத்து பராமரியுங்கள். செடி,தண்ணீர் ஊற்ற டிரிப் வசதி, மரக்கன்றுகளை கால்நடைகளிடமிருந்து பாதுகாக்கும் கூண்டுகள், தேவையான ஆட்கள் என்று எல்லாவற்றையும் என் செலவில் வழங்கச் செய்கிறோம். இளைஞர்கள் நீங்கள் அவை அனைத்தையும் மரமாக்குங்கள். அது போதும்" என்று அந்த இளைஞர்களிடம் சொல்லியிருக்கிறார். 


 கரூர் இளைஞர்கள்

அதோடு, சின்னவரப்பாளையத்தில் சில நாள்களுக்கு முன்பு 'கானகத்தில் கரூர்' என்ற மரம் வளர்க்கும் இளைஞர்களின் திட்டத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர், தன் பங்குக்கு இரண்டு மரக்கன்றுகளை நட்டு இந்தத் திட்டத்தை தொடங்கியும் வைத்திருக்கிறார். மரம் வளர்ப்புத் திட்டத்தில் படு ஆர்வமாக இருக்கும் 'கானகத்தில் கரூர்' திட்டத்தின் தலைவர் கார்த்திகேயனிடம் பேசினோம்.
 கரூர் இளைஞர்"கரூர் மாவட்டம் 'பொட்டல் காடு' அதிகம் உள்ள மாவட்டம். வடஎல்லையில் காவிரி ஓடினாலும், செழிப்பான மாவட்டம் கிடையாது. 'பொட்டுத் தூத்தல் விழாதா'ன்னு வானத்தையே எப்போதும் அண்ணாந்து பார்க்கும் சம்சாரிகளைக் கொண்ட 'மானாவாரி' நிலங்களை அதிகம் கொண்ட மாவட்டம் இது. கரூருக்குத் தெற்கே போனால், கருவேல மரங்கள் மட்டுமே அதிகமாக இருக்கும். இதனால், மழைப்பொழிவு குறைவாகக் கொண்ட மாவட்டமாக கரூர் இருக்கிறது. அதனால், மரம் வளர்க்கும் திட்டத்தை தொடங்கலாம்ன்னு நினைச்சோம். அதுக்கு சில இளைஞர்கள் ஆரம்பத்துல ஒத்துழைப்பு தந்தாங்க. கடந்த ஒன்றரை வருஷத்துக்கு முன்பு எனது வீட்டுக்கு அருகே காடு போல கிடக்கும் இடத்தில் முளைத்துக் கிடந்த வேம்பு, புங்கை மரக்கன்றுகளைப் பிடுங்கி, எங்க ஊர், மற்ற கிராமங்களில் அங்கங்கே நட்டோம். அந்தப் போட்டோக்களைச் சமூக வலைதளங்களில் பகிர,பல இளைஞர்கள் ஆர்வமாகி எங்களோடு வந்து சேர்ந்தாங்க. இதனால்,எங்க காசுல வெளியில மரக்கன்றுகள் வாங்கி அங்கங்கே நட ஆரம்பிச்சோம். இதைக்  கேள்விபட்டு பலர் தங்கள் இல்ல திருமணம், பிறந்த நாள் விழாக்களில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்க எங்ககிட்ட மரக்கன்றுகள் கேட்பாங்க. நாங்க எங்க காசை போட்டு மரக்கன்றுகளை வாங்கிக் கொடுக்க ஆரம்பிச்சோம். 

 கடந்த ஒன்றரை வருடங்களில் ஐயாயிரம் மரக்கன்றுகளை அப்படி வழங்கியிருப்போம். அப்புறம், விதைப்பந்து செய்வது பற்றி நாங்க பயிற்சி எடுத்துக்கிட்டு, இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட விதைப்பந்துகளைச் செஞ்சு மாவட்டம் முழுக்க வீசி இருக்கிறோம். அதோட, இந்த மாவட்டத்து மண்ணுக்கு என்ன மரக்கன்றுகள் செட்டாகும், எந்த மரக்கன்றுகள் உடனே முளைத்து மரமாகும் தன்மை கொண்டது என்ற ஆய்வை மேற்கொண்டோம். அப்போதுதான், புங்கையும், வேம்புவும் இந்த மாவட்டத்து மண்ணில் தழைத்து வளரும்ங்கிற உண்மையைக் கண்டறிந்தோம். பூவரசுவும் ஓரளவு வளர்வதை உணர்ந்தோம். அதன்பிறகு, அந்த மரக்கன்றுகளையே அதிகம் நடவும்,பிறர்க்கு வழங்கவும் ஆரம்பித்தோம். முதல்ல,காடுகளில் முளைத்திருக்கும் செடிகளைப் பிடிங்கியும், காசுக்கு வெளியில் செடிகள் வாங்கியும் ஒப்பேத்தி வந்தோம். இரண்டு மாதங்களாதான் நாங்களே எனது இடத்தில் மரக்கன்றுகளை உருவாக்கி, அதன்மூலம் நட ஆரம்பித்தோம். அதோட,'வீட்டுக்கு ஒரு துளசி செடி'ங்கிற திட்டத்தை உருவாக்கி, துளசி விதைகளைச் சில கிராமங்களில் வீடு வீடாக போய் வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளோம். இந்தத் திட்டத்தை மாவட்டம் முழுக்க செய்யவிருக்கிறோம். ஏன்னா, துளசிச் செடி இருந்தா சளியை விரட்டலாம். அந்த வீட்டை சுற்றி நல்ல ஆக்சிஜன் கிடைக்கும். இதனால், வீட்டில் உள்ள அனைவருக்கும் நோய் எதிப்புச்சக்தி அதிகரிக்கும்.

இந்தச் சூழலில்தான், எப்படியோ இந்த மரம் வளர்ப்புத் திட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சார் கவனத்திற்கு போக, எங்களைக் கூப்புட்டுப் பாராட்டினார். அதோட,'கானகத்தில் கரூர்'ங்கிற பேர்ல மாவட்டம் முழுக்க ஒரு லட்சம் மரக்கன்றுகளை வைத்து அவை அனைத்தையும் மரமாக்குங்க. அதற்கு, தேவையான அனைத்து வசதிகளையும் நான் செஞ்சு தர்றேன்'ன்னு சொன்னார். சந்தோஷமாக தலையாட்டினோம். சில நாள்களுக்கு முன்பு அமைச்சர் எங்க ஊர்ல இரண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்து இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். 'இவ்வளவு மரக்கன்றுகள் வைத்தோம்'ன்னு எண்ணிக்கைக்காக மரக்கன்றுகள் வைக்க வேண்டாம். ஐந்நூறு மரக்கன்றுகள் வைத்தாலும், அத்தனை மரக்கன்றுகளையும் மரமாக்கணும். அதுதான் முக்கியம்'ன்னு அறிவுரை வழங்கியிருக்கிறார். அதனால், நாங்க வைக்கப்போகும் அத்தனை மரக்கன்றுகளையும் மரமாக்கியே தீருவோம். இது சத்தியம்!" என்றார் உறுதி மேலிட..!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!