சென்னை பாரிமுனையில் இடிந்துவிழுந்த நூறாண்டுகள் பழைமையான கட்டடம்!

சென்னை பாரிமுனையில் நூறாண்டுகள் பழைமையான கட்டடம் ஒன்று இடிந்துவிழுந்தது. 


தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஒகி புயலால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில நாள்களாக விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. இந்தநிலையில், பாரிமுனை பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள ஆம்பர்சன் தெருவில் இருந்த பழைமையான கட்டடம் ஒன்று இடிந்துவிழுந்தது. இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஒற்ரீஸ்வர் ஆலய டிரஸ்ட்-டுக்குச் சொந்தமான அந்தக் கட்டடத்தில் செருப்புக் கடை உள்பட பல்வேறு கடைகள் செயல்பட்டு வந்தன.

 

இந்தநிலையில், அந்தக் கட்டடம் இன்று இடிந்துவிழுந்தது. அந்தப் பகுதியில் மழை நீர் தேங்கியிருந்ததால், கட்டடம் இடிந்துவிழுந்ததாகக் கூறப்படுகிறது. கட்டடம் இடிந்து அருகில் உள்ள வீட்டின் கழிவறை மீது விழுந்தது. சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!