வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (01/12/2017)

கடைசி தொடர்பு:17:56 (01/12/2017)

மழை நீருடன் கழிவுநீர்... கொந்தளிக்கும் மக்கள்; கண்டுகொள்ளாத கலெக்டர்

பெரம்பலூரில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வீட்டுக்குள் வருகிறது என்று மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பதால் கிராம மக்கள் போராட்டத்துக்குத் தயாராகி வருகிறார்கள்.

                           

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததால் பல மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்குகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. வேப்பந்தட்டை பகுதிகளில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் வீடுகளுக்குள் புகுந்ததால் வீட்டில் உள்ளவர்கள் அவர்களின் நண்பர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

வேப்பந்தட்டை அருகேயுள்ள கிராமத்தில் பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் பஸ் நிறுத்தம் அருகே 2, 3 வது வார்டுப் பகுதிகள் மிகவும்  தாழ்வான பகுதி. ஒவ்வொரு முறையும் கனமழை பெய்யும்போதெல்லாம் மழைநீர், கழிவு நீர்வாய்க்கால்கள் நிரம்பி தெருவுக்குள் வருகிறது என்று பலமுறை கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனுகொடுத்திருக்கிறார்கள் கிராம மக்கள். இன்று வரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாகக் கனமழை பெய்ததால் ஊரின் பல்வேறு தெருக்களிலிருந்து வெளியேறும் மழை மற்றும் கழிவு நீர் கலந்து அருகிலுள்ள வேதநதி ஓடை செல்லும். அந்த ஓடை நிரம்பி, தெருவுக்குள் புகுந்து வீடுகளில் தேங்கிநிற்கிறது. மழையும்  தொடர்ந்து பெய்துகொண்டு இருப்பதால் கழிவுநீர் வெளியேற முடியாமல் ராமராஜ், ராமசாமி, நடராஜ், செல்வராஜ், குப்பு, கோவிந்தன், உள்ளிட்ட 20 பேரின் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் முழங்கால் அளவுக்குத் தேங்கியது.இனியும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள் அப்பகுதி மக்கள்