மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகக் குரல் கொடுக்கும் பிங்க் அம்பாசிடர்கள்!

பொதுவாக புற்றுநோய் என்றாலே நம்மில் பலருக்கு அதீத பயம் ஏற்படுகிறது. அதுவும் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் என்றால் அந்தப் பயம் சற்று அதிகமாகவே இருக்கிறது. இதற்கான காரணம் இந்நோயின் அறிகுறிகள், கண்டறியும் முறைகள் மற்றும் சுய பரிசோதனை வழிமுறைகள் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாமையே ஆகும். 

மார்பகப் புற்றுநோய்

உலகம் முழுவதும் மார்பகப் புற்றுநோயால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதேபோல் இந்நோயாயினால் ஏற்படும் இறப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கான ஒரு முக்கிய காரணம் இந்நோய் குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே இல்லாததே ஆகும். `புற்றுநோயால் இறப்பு ஏற்படலாம் ஆனால், அறியாமையால் ஏற்படக் கூடாது’ என்ற நோக்கத்தில், "இந்தியா டர்ண்ஸ் பிங்க்" என்ற இலாப நோக்கமற்ற தன்னார்வ இயக்கம் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மார்பகப் புற்றுநோயைப் பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இதன் ஒரு பகுதியாகப் புதுச்சேரி மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த 'இந்தியா டர்ண்ஸ் பிங்க்' நிறுவனத்தின் இந்த வருடம் பிங்க் அம்பாசிடராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுவையைச் சேர்ந்த முனைவர் ஏ.பிரமிளா தமிழ்வாணன், புதுச்சேரி விமான நிலையத்தில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்வில் புதுச்சேரியில் வசிக்கும், அதேநேரம் சமூக அக்கறை கொண்ட 18 பேரை பிங்க் அம்பாசிடராகத் தேர்ந்தெடுத்து அவர்களைச் சிறப்பித்தனர். பின்னர், அவர்களுக்கு மக்களிடம் விழிப்பு உணர்வைக் கொண்டு சேர்க்கும் பணியைப் பற்றி விவரித்தார். மேலும், ஆர்வமுள்ள கல்லூரி மாணவ மாணவிகளைப் பிங்க் வாரியர்ஸ்களாகவும் நியமித்து, அவர்கள் மூலம் அனைத்து கிராம மற்றும் நகர்ப்புற மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் கூறினார். இந்த முகாமில் நோயின் அறிகுறிகள், நோய் கண்டறியும் முறை, தடுக்கும் வழிமுறைகள், சுய மார்பகப் பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளைப்பற்றி விவரித்து சிற்றேடுகளையும் வழங்கினர். இறுதியாகப் புதுச்சேரி ஆளுநரைச் சந்தித்து அவரையும் பிங்க் அம்பாசிடராக கௌரவித்து, எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விவரித்தனர். வரும் 2030-க்குள் மார்பகப் புற்றுநோய் அற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் செயல்படுகிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!