வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (01/12/2017)

கடைசி தொடர்பு:08:53 (02/12/2017)

தொடர் மழை எதிரொலி: நிரம்பி வழியும் நெல்லை மாவட்ட அணைகள்!

நெல்லை மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் பெய்த மழையால் சேர்வலாறு அணை 27 அடியும், பாபநாசம் அணை 24 அடியும் உயர்ந்துள்ளன.

மழையால் பாபநாசம் அணை உயர்வு

குமரிக் கடலோரத்தில் மையம் கொண்ட ஒகி புயலால் நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்வதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது. குளங்களும் நிரம்பி வழிகின்றன. நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் கடனா அணை, கருப்பா அணை, கொடுமுடியாறு அணை, குண்டாறு அணை, நம்பியாறு அணை, ராமாநதி அணை ஆகிய 6 அணைகள் நிரம்பிவழிகின்றன.

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகியவையும் வேகமாக நிரம்பிவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நவம்பர் 30-ம் தேதி தமிழகத்திலேயே அதிகபட்சமாக பாபநாசம் அணைப்பகுதியில் 45 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இது தவிர, நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மட்டும் நேற்று ஒரே நாளில் 184.9 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. 

அணைப்பகுதியில் பெய்த கனமழையால், பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 24 அடி உயர்ந்து 131 அடியை எட்டியது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 27 அடி அதிகரித்து 148.7 அடியாக உயர்ந்தது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகம் இருந்ததால் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 105.60 அடியை எட்டியது. தொடர்ந்து அணைப்பகுதியில் மழை பெய்துவருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்கிறது. அத்துடன், அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டு விட்டதால் விரைவாக அணைகள் முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாமிரபரணி

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அனைத்துத் தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. ஆற்றின் 7-வது தடுப்பணையான மருதூர் அணை முழுமையாக நிரம்பி வழிகிறது. கடந்த 10 வருடங்களுக்குப் பின்னர் இந்த அணை நிரம்பியிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தத் தடுப்பணை மூலமாகச் சுமார் 7500 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும் என்பதால், விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி அதிகரித்துள்ளது.