அரசு வளைகாப்பில் மயங்கிவிழுந்த கர்ப்பிணிப் பெண்!

சேலத்தில் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி அழகாபுரத்தில் உள்ள கூட்டுறவு சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அமைச்சர் வருவதாகச் சொல்லி நீண்ட நேரம் காக்க வைத்ததால், புதூரைச் சேர்ந்த செல்வி என்ற கர்ப்பிணிப் பெண் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

இதுதொடர்பாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்களிடம் விசாரித்தபோது, '’தமிழ்நாட்டில் பெண்ணைத் திருமணம் செய்துகொடுத்த பிறகு அந்தப் பெண் கருவுற்றால் 7-வது மாதம் தாய் வீட்டார் வளைகாப்பு நடத்தி, தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால், ஏழை, எளிய வீடுகளில் வறுமையின் காரணமாக வளைகாப்பு நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதை கருத்தில்கொண்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது சமுதாய வளைகாப்பு நடத்தி அவர்களுக்கு வளையல்கள் அணிவித்து, தாம்புலத்தட்டில் பழங்கள் வைத்து குடும்பத்துக்கான சீர்வரிசை கொடுப்பார். இது அரசு சார்பாக சமுதாய வளைகாப்பாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது.

ஜெயலலிதா இறந்தபிறகு இந்நிகழ்ச்சி நடைபெறவில்லை. இன்று சேலத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்குச் சமூக நலத்துறை சார்பாக அழகாபுரம் கூட்டுறவுச் சமுதாயக் கூடத்தில் சமுதாய வளைகாப்பு நடத்துவதாக அறிவித்ததை அடுத்து, 500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் காலை 7:30 மணிக்கே வரவழைக்கப்பட்டனர். 

சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா வருவதாக அறிவிக்கப்பட்டது. சேலம் கலெக்டர் ரோகிணி, மாவட்டச் சுகாதாரத் துறை அலுவலர் பூங்கொடி, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க., மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சக்திவேல், மேட்டூர் எம்.எல்.ஏ., செம்மலை, சங்ககிரி எம்.எல்.ஏ., ராஜா, வீரபாண்டி எம்.எல்.ஏ., மனோன்மணி உட்பட 10 எம்.எல்.ஏ-க்கள், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உட்பட பலரும் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியை காலை 9 மணிக்குச் சத்துணவு திட்டத் துறை முதன்மைச் செயலர் மணிவாசன் தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா வருவதாக கர்ப்பிணிப் பெண்களை 2 மணி நேரம் காக்க வைத்ததால், புதூரைச் சேர்ந்த செல்வி என்ற கர்ப்பிணிப் பெண் மயக்கமடைந்து கீழே விழுந்தார். ஆம்புலன்ஸூக்குத் தகவல் கொடுத்தும் 10 நிமிடம் ஆகியும் வராததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு மாவட்டச் சுகாதாரத் துறை அலுவலர் பூங்கொடியின் காரில் செல்வி அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்’ என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!