வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (01/12/2017)

கடைசி தொடர்பு:08:44 (02/12/2017)

’மாதந்தோறும் குறைதீர்ப்புக் கூட்டம் நடத்த வேண்டும்!’ - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்

சேலம் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகளின் சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவிகள், பிரத்யேக குறை தீர் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்ற தமிழக அரசின் முதன்மைச் செயலர் நிர்வாக ஆணையர் அவர்களின் உத்தரவுகளைச் செயல்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அம்மாசி, ''உதவித் தொகை கோரி மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கும் மனுக்களை கிராம நிர்வாக அதிகாரிகள் முறையான பதிவேட்டில் பதிவிட வேண்டும். மூப்பு அடிப்படை முறையாகப் பின்பற்ற வேண்டும். மனுமீது கிராம நிர்வாக அலுவலர் எடுத்த நடவடிக்கையை, பத்து நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியரிடம் வழங்க வேண்டும்.
மாதந்தோறும் வந்த விண்ணப்பங்களில் சீனியாரிட்டி அடிப்படையில் வட்டாட்சியர் உத்தரவிட்ட பட்டியலை மாற்றுத்திறனாளி பயனாளிகள் பார்வைக்கு நோட்டீஸ் போர்ட்டில் ஒட்டி வைக்க வேண்டும்.

அதேபோல், மாதந்தோறும் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் மற்றும் கோட்ட அளவில் கோட்டாட்சியர்களும் மாற்றுத்திறனாளிகளுக்கென தனியாகக் குறைதீர் முகாம்களை நடத்த வேண்டும். குறைகளைக் கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோட்டாட்சியர்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான மாவட்டச் சிறப்பு துணை ஆட்சியர், வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துச் சமூகப்பாதுகாப்பு வட்டாட்சியர்கள் கலந்துகொள்ள வேண்டும். 

மாற்றுத்திறனாளி உதவித் தொகை பெற தகுதியற்ற விண்ணப்பங்களை, துணை வட்டாட்சியர் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் மட்டுமே கள ஆய்வு செய்து நிராகரிக்க வேண்டும். மற்ற அலுவலர்கள் மனுக்களை நிராகரிக்கக் கூடாது. இடம்பெயரும் மாற்றுத்திறனாளிகள், அடுத்த முதல் மூன்று மாதங்களுக்குப் பழைய வட்டாட்சியர் அலுவலகத்திலேயே உதவித் தொகை பெறலாம். புதிய முகவரியில் உதவித்தொகை பெற ஆன் லைன் மூலம் வசதி செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் தேவையான வீல் சேர் வசதிகள் மாற்றுத் திறனாளிகளுக்குச் செய்து கொடுக்க வேண்டும். சாய்வுதளம் மற்றும் கைப்பிடி வசதிகளுடன் ஆண், பெண் மாற்றுத் திறனாளிகளுக்கும் தனித்தனியான கழிப்பறைகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்க வேண்டும்' என்றார்.