வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (01/12/2017)

கடைசி தொடர்பு:08:41 (02/12/2017)

’சுனாமி வதந்தி பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை’ - தூத்துக்குடி ஆட்சியர் எச்சரிக்கை

கடந்த 2 நாள்களாக தூத்துக்குடியில் பெய்துவரும் கனமழை மற்றும் வீசும் காற்றைக் காரணம் காட்டி, சமூக வலைதளங்களில் சுனாமி குறித்து வதந்தி ஏற்படுத்துவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் வெங்கடேஷ், “தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையினால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் 36 எனவும், இதில் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 13 எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பகுதிகளைக் கண்காணித்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முக்கியத் துறைகளின் அலுவலர்களைக் கொண்ட 13 மண்டலக் குழுக்களும், வட்ட அளவில் 9 குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளுக்கு 6 இயங்கு குழுக்கள் (மொபைல் டீம்), ஊராட்சிப் பகுதிகளுக்கு 29 இயங்கு குழுக்களும் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

வெள்ள மீட்புப் பணிக்காக பயிற்சி பெற்ற 5  காவல்துறை குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. வெள்ளம் மற்றும் சூறாவளிக் காற்றினால் விழும் மரங்களை உடனடியாக அகற்ற மின்சார மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் தேவையான பணியாட்கள் தயார் நிலையில் உள்ளனர். இதோடு, வெள்ள மீட்புப் பணிகளுக்காக தேவையான படகுகள், மீட்பு உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள்  தயார் நிலையில் உள்ளனர். வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பாதிப்புக்கு உள்ளாகும் பொதுமக்களைத் தங்க வைக்க 154 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. மக்கள், அவரவர் பகுதியில் உள்ள வெள்ளச் சேதம் குறித்த தகவல்களைத் தெரிவிக்கவும் மீட்புப் பணியில் உடனடி நடவடிக்கை எடுத்திடவும் மக்கள், அவசர கால செயலாக்க மையத்தின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவும், 0461 – 2340101 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். இதுதவிர, 94864-54714 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், eoctut@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம்.

பெய்துவரும் கனமழை மற்றும் வீசும் சூறாவளிக்காற்றினால் தூத்துக்குடியில் சுனாமி வரவுள்ளதாக சமூக வலைதளங்களில் சிலர் வதந்திகளைப் பரப்பி மக்களிடம் பீதியை ஏற்படுத்திவருகிறார்கள். இவ்வாறு வதந்தி பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் யாரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க