அரசுப் பேருந்தில் குடையுடன் பயணம்! பெரம்பலூர் அவலம்

அரசுப் பேருந்தில் மக்கள் குடை பிடித்துக்கொண்டு பயணம் செய்ததுமட்டுமில்லாமல், பயணிகள் நடத்துநரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு தொற்றிகொண்டது. இந்தச் சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

                     

பெரம்பலூரிலிருந்து வேப்பந்தட்டை வழியாகக் கள்ளப்பட்டி கடம்பூருக்கு அரசுப் பேருந்து தினசரி சென்றுவருகிறது. இந்நிலையில் கடம்பூரிலிருந்து, வேப்பந்தட்டை வழியாக பெரம்பலூர் நோக்கிப் பேருந்து இன்று சென்றுகொண்டிருந்தது. வேப்பந்தட்டையைக் கடந்து சென்றபோது, கனமழை பெய்தது. அப்போது பேருந்தின் மேற்கூரையிலிருந்த துளை வழியாக மழைநீர் பேருந்துக்குள் கொட்டியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் நனைந்தவாறும், குடைகளைப் பிடித்தவாறும் வேதனையுடன் பயணம் செய்தனர்.

                       

பேருந்தில் பயணம் செய்த அசன் அலியிடம் பேசினோம். "இது பேருந்துதானா இல்லை மாட்டு வண்டியா என்ற சந்தேகம் எழுந்துகொண்டே இருக்கிறது. நேற்று பெய்த ஒரு மழைக்கே பேருந்து முழுவதும் மழை கொட்டியது. சீட்டில் உட்கார்ந்திருந்தவர்கள் எல்லோரும் குளித்தவர்கள் போல் இறங்கிச் சென்றார்கள். அதுமட்டுமில்லாமல் பேருந்தின் மேற்கூரைதான் ஓட்டையாக இருக்கும்னு பார்த்தா, சின்ன பள்ளத்தில் இறங்கி ஏறினாலும்கூட, பேருந்தின் மொத்த பாடியுமே கழன்று விழுந்துவிடுவது போல ஆடி, வயிற்றில் புளியைக் கரைச்சது. உள்ளே உட்காரவே மக்கள் பயந்தார்கள். இதை எதிர்த்துப் பயணிகள், நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். அதற்கு அவர் நாங்கள் என்ன செய்யமுடியும். அவர்கள் இந்தப் பேருந்தை எடுக்கச் சொல்கிறார்கள். நாங்கள் எடுத்துவருகிறோம் எங்களைத் திட்டி என்ன பயன் என்று பொறுப்பில்லாமல் பதில் சொல்கிறார்.

                 

இதுபோன்று அரசுப் பேருந்துகளைத் தரமற்றதாக இயக்குவதால்தான் பயணிகள் காத்திருந்து, தனியார் பேருந்துகளில் ஏறுகின்றனர். மேலும், அரசுப் பேருந்து வாங்கும் அதே கட்டணம்தான் தனியார் பேருந்துகளிலும் டிக்கெட்டுக்கு வாங்குகின்றனர். ஆனால், தனியார் பேருந்துகள் 2 வருடத்துக்கு ஒருமுறை புதிய பேருந்து விடுகின்றனர். அரசுப் பேருந்துகளில் இதுபோன்ற அவலநிலை நீடித்தால் அரசு பேருந்தையே யாரும் விரும்ப மாட்டார்கள்’’ என்று முடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!