கோவை மக்களிடம் பிரியா விடை பெறும் கும்கி யானைகள் பாரி, சுஜய்!

கோவை, சாடிவயல் முகாமில் உள்ள பாரி மற்றும் சுஜய் கும்கி யானைகள் முதுமலைக்குச் செல்ல உள்ளன.

சுஜய்

சுஜய்

கோவை புறநகர்ப் பகுதிகளில் மனித – யானை மோதல் அதிகரித்ததால், சாடிவயல் முகாமில் கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சாடிவயல் முகாமில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாரி மற்றும் சுஜய் ஆகிய கும்கி யானைகள் உள்ளன. ஊருக்குள் நுழைந்து அட்ராசிட்டி செய்யும் காட்டு யானைகளை விரட்டுவது, உடல் நலக்குறைபாடுள்ள யானைகளின் உடல் நலனை சரிபடுத்த உதவுவது, இந்த கும்கி யானைகளுக்கு அசைன்மென்ட்.

இதில், பாரி (35) சுஜய் (47) இரண்டு கும்கி யானைகளும் கோவையில், பல்வேறு விதமான பிரச்னைகளில் வனத்துறைக்குக் கைக்கொடுத்து உதவியுள்ளன. இதனால், கோவை மக்களிடமும் இந்த இரண்டு கும்கி யானைகளும் நன்கு பரிச்சயம். குறிப்பாக, மதுக்கரை மகாராஜா பிரச்னை உள்ளிட்ட முக்கியப் பிரச்னையின்போது, வனத்துறைக்கு பக்கபலமாக இருந்தது இந்த இரண்டு யானைகள்தான்.

பாரி

பாரி

பல்வேறு பிரச்னைகளிலிருந்து காப்பாற்றியதால், மக்களிடம் மிகுந்த அன்பை இந்த யானைகள் பெற்றிருந்தன. கடந்த சில மாதங்களுக்குக் காட்டு யானை ஒன்றுடன் நடந்த மோதலில் சுஜய்யின் தந்தம் உடைந்துவிட்டது. இருந்தபோதும், சில பிரச்னைகளின்போது, வனத்துறைக்கு சுஜய் உதவியது. தற்போது, இந்த இரண்டு யானைகளையும் முதுமலைக்கு மாற்ற வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த இடத்துக்கு வேறு கும்கி யானைகள் வரவழைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து, கோவை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம், "மனித – யானைகள் மோதலைத் தடுக்க எங்களுக்குப் பக்கபலமாக இருப்பவை கும்கி யானைகள்தான். அவை இல்லாவிடின் நாங்கள் காட்டு யானைகளின் அருகில்கூட நெருங்க முடியாது. குறிப்பாக, கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கும்கியின் தேவை அதிகம் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தடாகம் பகுதியில் குட்டி யானை ஒன்றுக்கு உடல்நிலை குன்றிவிட்டது. ஆனால், அதன் அருகில் இருந்த தாய் யானை, எங்களை குட்டி யானையின் அருகில் விடவில்லை. பின்னர், கும்கி யானையுடன் சென்றவுடன், தாய் யானை எங்களை ஒன்றும் செய்யவில்லை. இதையடுத்துதான், குட்டி யானைக்குச் சிகிச்சை அளிக்க முடிந்தது. இப்படி, கும்கி யானைகள் ஏராளமான முக்கியத் தருணங்களில் எங்களுக்கு உதவியாக இருந்துள்ளன.  

ராமசுப்பிரமணியம்

கும்கி யானைகளை அடிக்கடி இடம் மாற்றுவது வழக்கமான ஒன்றுதான். அதன் அடிப்படையில்தான், தற்போது, இந்த இரண்டு யானைகளும் முதுமலைக்குச் செல்கின்றன. சாடிவயல் முகாமுக்கு விரைவில் இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்படும். அவற்றை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடந்துவருகின்றன" என்றார்.

வனத்துறை மருத்துவர் மனோகரன் கூறுகையில், "கும்கி யானைகள் இல்லாவிடின் நாங்கள் பல பிரச்னைகளை வெற்றிகரமாக முடித்திருக்க முடியாது. பிரச்னைகளைக் கையாள்வது மட்டுமல்ல, பல இடங்களில் காட்டு யானைகளிடமிருந்து, தங்களது உயிரைப் பணயம் வைத்து கும்கி யானைகள் எங்களைக் காப்பறியுள்ளன. மனிதர்கள் பேசுவதை நன்கு புரிந்துகொள்ளும் தன்மையைக் கொண்டவை. குறிப்பாக, சாப்பாடு என்ற வார்த்தை அதற்கு நன்கு புரியும்.

மனோகரன்

சாடிவயல் முகாமில் தற்போதுள்ள, சுஜய் மற்றும் பாரி இரண்டுமே நல்ல கும்கி யானைகள். வனத்துறைக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காமல், உதவியாக இருந்துள்ளன. குறிப்பாக, சஜய் யானைக்குத் தந்தம் உடைந்தபோதுகூட, சிகிச்சையின்போது எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!