குமரி மாவட்டத்தைப் புரட்டிப் போட்ட ஒகி புயல்! பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

குமரி மாவட்டத்தில் ஒகி புயல் காரணமாகப் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பு

பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ததால் மாவட்டம் முழுவதும் சுமார் 1,500 உயர்மின் அழுத்த கம்பங்கள், 2,500 குறைந்த மின் அழுத்த கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததில் பல இடங்களில் மின்சார வயர்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மாவட்டம் முழுவதும் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதைச் சரிசெய்ய 3 நாள்கள் ஆகும் எனத் தெரியவந்துள்ளது.

மாவட்டத்திலுள்ள அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஏற்கெனவே 5 பேர் உயிரிழந்த நிலையில், கீரிப்பாறை அருகே பரளியாறு பகுதியில் மரம் முறிந்து விழுந்து விமல் என்ற 27 வயது இளைஞர் உயிரிழந்தார். புயலின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. படகுகளும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. 

கோவிலில் தண்ணீர்

சுசீந்தரம் தாணுமலையான் கோயிலின் உள்ளே தண்ணீர் சென்றுவிட்டதால் பக்தர்கள் உள்ளே செல்ல முடியாத நிலைமை உருவானது. ஆன்மிகச் சுற்றுலாவுக்காக வந்திருந்த பயணிகள் கோயிலுக்குள் செல்ல முடியாமல் தவித்தார்கள். தேங்காய்பட்டணம், முட்டம் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த 30 படகுகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அவற்றில் சிலவற்றை மீனவர்கள் மீட்டுள்ள நிலையில் எஞ்சிய படகுகளைக் காணாமல் தவித்துவருகிறார்கள். 

மின்சாரம் இல்லாததால் உணவகங்கள் அனைத்தும் மூடிக்கிடக்கின்றன. அதனால் பணி நிமித்தமாக வெளியூர்களிலிருந்து வந்து தங்கியிருப்பவர்கள் உணவு கிடைக்காமல் திண்டாடினார்கள். பல்வேறு கிராமங்களின் சாலைகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டு உள்ளன. கடலோரக் கிராமங்களின் உள்ளே கடல் நீர் புகுந்ததால் வீடுகளைத் தண்ணீர் சூழ்ந்துள்ளன. வீட்டை விட்டு அவர்கள் வெளியே வரமுடியாத நிலைமை உள்ளது. கன்னியாகுமரி மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள பல்வேறு கிராமங்கள் இன்னும் வெள்ளநீர் வடியாமல் வீடுகள் அனைத்தும் தண்ணீரில் தத்தளித்தபடியே இருக்கின்றன.

வணிக நிறுவனங்கள் திறக்கப்படாததால், குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள் வாங்க முடியாமல் மக்கள் திணறினார்கள். வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துப் பொருள்களை வாங்க வெளியில் செல்ல முடியாத அளவுக்குத் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. அப்படியே வெளியே சென்றாலும் கடைகள் திறக்கப்படாததால் நோயாளிகள் சிரமத்துக்கு உள்ளானார்கள். குடிநீர் கிடைக்காமலும் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்துவருகிறார்கள். 

படகு மூலம் மீட்பு

மின்சாரம் முடங்கியதால் ஏ.டி.எம் மையங்கள் செயல்படவில்லை. மாதத்தின் தொடக்கத்தில் சம்பளப் பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளானார்கள். ஓய்வூதியதாரர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் பணம் எடுக்க முடியாமல் பரிதவித்தார்கள். ஒரு சிலர், வெளி மாவட்டங்களில் இருக்கும் தங்களின் உறவினர்களைப் பணம் கொண்டு வருமாறு அழைப்பு விடுத்தார்கள். மொத்தத்தில் ஒகி புயலால் குமரி மாவட்ட மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு தவிக்கும் நிலை உருவாகியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!