வெளியிடப்பட்ட நேரம்: 21:41 (01/12/2017)

கடைசி தொடர்பு:10:40 (02/12/2017)

இடுக்கி அணையும் முல்லைப் பெரியாரும் உடைந்துபோய்விடும் - திருப்பூரில் வைகோ பேச்சு

வைகோ

ம.தி.மு.க கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் சிவபாலன் இல்ல திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவும், அவைத் தலைவர் துரைசாமியும் இன்றைய தினம் (1-12-2017) திருப்பூருக்கு வந்திருந்தார்கள். முதலில் மணமக்களை வாழ்த்திப் பேசிய வைகோ, பின்னர் திருப்பூர் உடனான தன்னுடைய உறவைப் பற்றி நினைவு கூர்ந்தார். திருமண விழாவில், அரசியல் பேசக் கூடாது என்று பொறுமை காத்தவர், பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது வழக்கமான தன் பாணியில் பொங்கித் தீர்த்தார்.

"அன்றைக்குத் திருப்பூரில் நடைபெற்ற வாலிபர் சங்க மாநாட்டின்போதுதான் முதன்முறையாகப் பெரியாரும் - அண்ணாவும் சந்தித்துக்கொண்டார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த தருணம் இந்தத் திருப்பூர் மண்ணில் அரங்கேறியிருக்கிறது. அதேபோல ம.தி.மு.க வரலாற்றிலும் திருப்பூருக்கு என்றுமே மிக முக்கியப் பங்கு இருக்கிறது. அன்று நாங்கள் தி.மு.க-விலிருந்து விலகியபோதும், இருட்டடிப்பு செய்யப்பட்டபோதும், எங்களுக்கு உறுதுணையாக தோள்கொடுத்து நின்றவர்களில் பலர் திருப்பூரைச் சேர்ந்தவர்கள்தான். மதுவுக்கு எதிராக விழிப்புஉணர்வை மக்களிடம் ஏற்படுத்த நீண்டதொரு நடைபயணத்தை மேற்கொண்டவர்கள் நாங்கள். அதை நாங்கள் ஓட்டுக்காகச் செய்யவில்லை. 'எதையும் தாங்கும் இதயம் வேண்டுமடா தம்பி' என்று அண்ணா எங்களைப் பார்த்துச் சொன்னதுபோல்தான் இருக்கிறது. இன்றைய குழந்தைகள் நவீனமயமான வாழ்க்கையை வாழ்ந்தாலும், அவர்களிடத்தில் நம் பண்பாட்டை எடுத்துச் சொல்லி நாம் வளர்க்க வேண்டும். மன தைரியத்தை அவர்களிடம் உண்டாக்க வேண்டும்.

வைகோ

இன்றையச் சூழலில், தமிழ்நாட்டின் தொன்மைகளும், இயற்கை வளங்களும், தகர்க்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் வாழ்வாதாரங்களை அழிக்கக்கூடிய வகையில்தான் தற்போதைய மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில், மீத்தேன் எரிவாயு திட்டம், நியூட்ரினோ திட்டம் போன்றவற்றை செயல்படுத்தியே தீர வேண்டும் என மத்திய அரசு துடிக்கிறது. தேனி மாவட்டம் பொட்டிப்புரம், அம்பரப்பர் மலையிலே நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்தினால், இடுக்கி அணையும், முல்லைப் பெரியார் அணையும் உடைந்துபோய்விடும். அதனைச் சுற்றியுள்ள 5 மாவட்டங்கள் பஞ்சப் பிரதேசமாகிவிடும். எனவேதான் அத்திட்டத்தை இங்கே செயல்படுத்தக் கூடாது என்றுகூறி, நீதிமன்றம் வரை சென்று நாம் தடை ஆணை பெற்றிருக்கிறோம். ஆனால், இப்போது உடனடியாக அத்திட்டத்தை நிறைவேற்றியாக வேண்டும் என்றும், தமிழக அரசு அதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார். மேலும் இதுபோன்ற திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பன்மடங்கு உயரும் என்றும் மத்திய அரசு சொல்கிறது. எங்களின் வளத்தை எல்லாம் அளித்துவிட்டுத்தான் ஒரு பொருளாதார வளர்ச்சியை நாடு அடைய வேண்டுமா?

தமிழ்நாடு அரசு முதுகெலும்பு அற்ற நிலையில் இருப்பதை பல நேரங்களில் நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, ஆட்சியாளர்களின் மனதுக்குள் ஒரு நடுக்கத்தை உருவாக்கி, தாங்கள் விரும்பியதை எல்லாம் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. தமிழக மக்களின் வாழ்க்கையைக் கிள்ளுக்கீரையாக எண்ணிக்கொண்டு மத்திய அரசு விளையாடிக்கொண்டிருக்கிறது.

வைகோ

 

தமிழகத்தில், இதுவரையிலும் 578 மீனவர்களுக்கு மேல் இலங்கைக் கடற்படையினரால் சுடப்பட்டுள்ளார்கள். ஆனால், இப்போது இந்தியக் கடலோரக் காவல்படையே நம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. இப்படியொரு சம்பவத்தை வேறு ஒரு மாநிலத்தில் நிகழ்த்திவிட முடியுமா. தமிழகத்தின் மண் வளத்தை இத்தனை ஆண்டுகளாக வாரிச் சுரண்டி, கோடி கோடியாக கொள்ளையடித்ததன் விளைவாகத்தான், நம்முடைய நதி ஆதாரங்களை நாம் தொலைத்துக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில் உயர் நீதிமன்றம் முழுமையாக யோசித்து, எதிர்கால நலனை கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும் என்ற நல்லதொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதைத் தமிழக அரசு முழுமனதாக வரவேற்க வேண்டுமே தவிர, அதனை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய மீண்டும் நீதிமன்றத்துக்குச் சென்றுவிடக் கூடாது'' என்று முழங்கி முடித்தார்.


டிரெண்டிங் @ விகடன்