வெளியிடப்பட்ட நேரம்: 21:37 (01/12/2017)

கடைசி தொடர்பு:21:37 (01/12/2017)

மூடப்படுகிறது வனப்பாதுகாவலர் அலுவகம்: தொடர்ந்து குறிவைக்கப்படும் கோவை அரசு நிறுவனங்கள்!

கோவை மத்திய அரசு அச்சகம், கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றைத் தொடர்ந்து, கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் அலுவலகமும் மூடப்பட உள்ளது.

கோவையில் அரை நூற்றாண்டாக இயங்கி வரும், மத்திய அரசு அச்சகத்தை நாசிக் அச்சகத்துடன் இணைப்பதற்கு, மத்திய அமைச்சரவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுமதியளித்தது. இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது கோவை மக்களை மேலும் பல அதிர்ச்சிகள் வரிசைகட்டி தாக்குகின்றன.

நிதி ஆயோக்கின் பரிந்துரையின்படி, கோவை மருதமலை சாலையில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தை லக்னோவுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதேபோல, கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை, சென்னை அலுவலகத்துடன் இணைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.

வனப்பாதுகாவலர் அலுவலகம்

கோவை கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் அலுவலகம் (புலிகள் திட்டம்)

 

இப்படி மத்திய அரசு நிறுவனங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்து வந்த நிலையில், தற்போது மாநில அரசும் தன் பங்குக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கியுள்ளது. அதன்படி, கோவையில் உள்ள கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் அலுவலகம் (புலிகள் திட்டம்), சென்னை அலுவலகத்துடன் இணைப்பதற்கான, அறிவிப்பை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் நான்கு புலிகள் காப்பகங்கள் உள்ளன. அதில் மூன்று காப்பகங்கள் கோவையை ஒட்டியுள்ளன. தற்போது, இந்த அலுவலகத்தை மூடுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் ஜலாலுதீன் கூறுகையில், "முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகிய மூன்று புலிகள் காப்பகத்துக்கான அலுவலகமாக, ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்த அலுவலகம் சென்னைக்கு மாற்றப்பட்டால் இங்கு நடந்துவந்த பணிகளில் தொய்வு ஏற்படும். குறிப்பாக, காப்பகத்தில் உள்ள புலிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள். அவை, ஊருக்குள் நுழைந்துவிட்டால் என்ன செய்வது என்பது குறித்து காப்பகங்களின் ஊழியர்களுடன் நேரடி தொடர்பில் இந்த அலுவலகம் உள்ளது.

ஜலாலுதீன்

தற்போது, இந்த அலுவலகம் சென்னைக்கு மாற்றப்பட்டால், முக்கிய பிரச்னைகளின்போது முடிவு எடுப்பதில் பாதிப்பு ஏற்படும். எந்த ஒரு விஷயத்துக்கும் சென்னையைத் தொடர்பு கொள்ள வேண்டும். சமயத்தில் சட்டம் ஒழுங்கே பாதிக்கப்படக்கூடும். அதேபோல, இந்த அலுவலகத்தில் பணிபுரிந்துவரும் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் சென்னைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.

மத்திய அரசும், மாநில அரசும் போட்டிப்போட்டுக் கொண்டு அலுவலகங்களை மூடுவதால், கோவை மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.