புதுச்சேரியில் மலிவு விலையில் அரசு மருந்தகங்கள்: முதலமைச்சர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் 40 சதவிகித மக்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி

உலக எஸ்ட்ஸ் தினத்தை ஒட்டி பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எய்ட்ஸ் நோய் பற்றி எதுவும் தெரியாது. அதனால் அவர்களுக்கு அந்த நோய்குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசு நிதி கொடுக்காத கால கட்டத்தில்கூட டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரியில்  காப்பாற்றப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் சிகிச்சை பெற்றவர்களில் 40 சதவிகித மக்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே. விபத்து ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு செல்லும்போது கிரிமினல் வழக்கு வரும் என்ற பயம் பொதுமக்களுக்கு இருக்கிறது. வரும் காலத்தில் எந்தவித தயக்கமும் இல்லாமல் மருத்துவ சிகிச்சை அளிக்க சட்டத்தில் வழி காணப்படும். அதேபோல தவறான சிகிச்சை அல்லது முறையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டும், உடலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகவும் தவிர்க்க முடியாமல் சில உயிர் இழப்புகள் ஏற்படுகிறது.

நாராயணசாமி

அப்படியான தருனங்களில் மருத்துவர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அத்தைகைய தாக்குதல்களைத் தடுக்கும் வகையிலும், மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தை நாங்கள் கொண்டுவந்தோம். ஆனால், அதற்கு எம்.எல்.ஏ-க்களிடம் இருந்து மாற்றுக் கருத்துகள் வந்ததால், அந்த சட்டத்தை  நிலைக்குழுவுக்கு அனுப்பியிருக்கிறோம். விரைவில் அந்த சட்டம் நிறைவேறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தேசிய சுகாதார இயக்கக ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல குறைந்த விலையில் மருந்துகள் கொடுக்க அரசு நிறுவனங்கள் மூலம் மலிவு விலை மருந்தகங்கள் விரைவில் தொடங்கப்படும்.  அதன்மூலம் 40 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் வரை குறைவான விலையில் பொதுமக்களுக்கு மருந்துகள் கிடைக்கும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!