வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (02/12/2017)

கடைசி தொடர்பு:08:12 (02/12/2017)

'விரக்தியின் விளம்பில் இருக்கிறார் ஸ்டாலின்’ - எடப்பாடி பழனிசாமி கிண்டல்!

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், விரக்தியின் விளிம்பில் இருக்கிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "ஒகி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. பாதிக்கப்பட்ட இடங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தலைமையிலான குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, தொடர்ந்து முன்னெச்சரிக்கைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆர்.கே.நகர் தொகுதியில் வருகின்ற 6-ம் தேதி முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளோம். ஆர்.கே.நகரில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். எங்களது ஆட்சி எப்படியாவது கவிழ்ந்துவிடும் என்று அவர் தொடர்ந்து எதிர்பார்த்துவந்தார். பத்து மாதங்களைக் கடந்து, தற்போது சிறப்பாக ஆட்சி செய்துவருகிறோம். அம்மாவின் திட்டங்களை செயல்படுத்தியுள்ள நாங்கள், மேலும் பல்வேறு புதிய திட்டங்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். எனவே, என்ன செய்வதென்று தெரியாமல் ஸ்டாலின் தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்துவருகிறார்’’ என்றார்.