வெளியிடப்பட்ட நேரம்: 23:01 (01/12/2017)

கடைசி தொடர்பு:08:06 (02/12/2017)

தமிழக அரசுமீது நிஸான் நிறுவனம் ரூ.5,000 கோடி புகார்! பின்னணி என்ன?

தமிழக அரசு தரவேண்டிய ரூ.5,000 கோடி நிலுவைத் தொகையைக் கேட்டு சர்வதேச தீர்ப்பாயத்தில் முறையிட இருப்பதாக நிஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிஸான்

 

2008-ம் ஆண்டில் ஜப்பானைச் சேர்ந்த நிஸான் நிறுவனமும் மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனமும் இணைந்து சென்னையில் கார் தொழிற்சாலையைத் தொடங்கின. 2015-ம் ஆண்டுவரை ஏழு ஆண்டுகளில் இந்நிறுவனங்கள் இங்கு ரூ.6,100 கோடி  முதலீடு செய்துள்ளன. ஆண்டுக்கு 4,80,000 கார்கள் தயாரிக்கும் அளவுக்கு தங்கள் ஆலையை விரிவுபடுத்தி உள்ளன. 

இந்திய அரசு, ஜப்பானுடன் பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் தொழில்துவங்கும் ஜப்பான் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை, ஊக்கத் தொகை உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். அந்தவகையில், 2015-ம் ஆண்டு வரை தமிழக அரசு நிஸான் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.5,000 கோடியாக இருக்கிறது. அதைத் தரக்கோரி தமிழக அரசிடம் நிஸான் நிறுவனம் முறையிட்டது. அதற்கு உரிய பதில் கிடைக்காததால், சென்ற ஆண்டு ஜூலை மாதம்  நிலுவைத்தொகையை பெற்றுத்தரக் கோரி மத்திய அரசுக்கு நிஸான் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது. முன்னதாக, மார்ச் மாதத்தில் நிஸான் நிறுவனத்தலைவர் கார்லோஸ் கோஸ்ன், நிலுவைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.

நிஸான் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, தொகையைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், எந்த முடிவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, பிரச்னையைத் தீர்க்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்றும் அதன் முதல்கட்ட விசாரணை டிசம்பர் மாதத்தின் நடுவில் தொடங்க வேண்டும் என்றும் இல்லையெனில் சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் நிஸான் நிறுவனம் இறுதி எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அது கண்டுகொள்ளப்படவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில், ரூ.5,000 நிலுவைத் தொகை கேட்டு இந்திய அரசுக்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்வதற்கான முயற்சிகளை நிஸான் நிறுவனம் தொடங்கி உள்ளது. ஜப்பானுடன் செய்துகொண்ட பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தை இந்தியா மீறியதாக புகார் அளிக்கப்போவதாக நிஸான் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, சர்வதேச தீர்ப்பாயத்தில் இந்திய அரசுக்கு எதிராக இதுபோன்ற 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வகை வழக்குகளைச் சந்திப்பதில் உலக நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. இப்போது நிஸான் நிறுவனமும் வழக்கு தொடர இருப்பதாக கூறியுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.