வெளியிடப்பட்ட நேரம்: 23:33 (01/12/2017)

கடைசி தொடர்பு:07:58 (02/12/2017)

புயல் பாதிப்புக்கு உதவத் தயார்! முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு உதவி செய்யத் தயராக இருப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

புயல்

 

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஒகி புயலாக உருமாறி தென் மாவட்டங்களைப் புரட்டிப்போட்டது. புயல் மற்றும் கனமழையால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. முக்கியமாக கன்னியாகுமரி மாவட்டம் புயலால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால், மாவட்டம் முழுவதும் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அடுத்த சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி அளித்தார். புயல் சமயத்தில் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் முதல்வரிடம் தெரிவித்துள்ளார். புயல் பாதிப்புகுறித்து தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.