கொங்கு மண்டலம் பா.ஜ.கவின் கோட்டையாக மாறும்....! வானதி சீனிவாசன் கருத்து


திருப்பூரில் நடைபெற்ற பா.ஜ.கவின் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் திருப்பூர் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தமிழக அமைச்சர்களை டெல்லிக்கு நேரில் அழைத்து, குறைகளை தீர்த்து வைக்கும் அரசாக மத்திய பா.ஜ.க அரசு திகழ்ந்துவருகிறது. இதைப் பயன்படுத்தி தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல முயற்சி எடுக்க வேண்டும். எந்தவொரு இந்தியக் குடிமகனையும் பாதிக்கின்ற வகையில் மத்திய அரசின் திட்டங்கள் இருக்காது. நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதைப் பற்றிய முழுமையான புரிதல்களே இல்லாமல், எடுத்தவுடன் எதிர்ப்பு தெரிவிப்பது நல்லது அல்ல.

தமிழகத்தில் வேகமாக வளர்ந்துவரும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.கவுக்கு அடுத்ததாக மக்களிடம் அதிக ஆதரவைப் பெற்ற கட்சியாக பா.ஜ.க திகழ்கிறது. கூடிய விரைவில் கொங்கு மண்டலம் பா.ஜ.கவின் கோட்டையாக மாறும். மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி நம் மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காகவே தமிழகத்தில் மக்கள் சேவை மையத்தை நாங்கள் கட்சி சார்பில் திறந்துவருகிறோம். 

மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பதே எங்களின் முக்கிய கடமையாக இருக்கும். மத்திய அரசு தமிழ்நாட்டில் நிறைவேற்றிய பல திட்டங்களுக்கு, இங்குள்ள கட்சிகளின் தலைவர்கள் பலர் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்துவருகிறார்கள். மத்திய அரசின் எந்தவொரு திட்டத்தையும் அவை தொடங்கப்பட்ட துவக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவித்து விடுவதை இங்கு பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!