வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (02/12/2017)

கடைசி தொடர்பு:07:53 (02/12/2017)

பாதையும் இல்லை... பாலமும் இல்லை! இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கிச்சென்ற அவலம்

பெரம்பலூரில் இறந்த ஒருவரின் சடலத்தை இடுப்பளவு ஆற்றுத் தண்ணீரில் எடுத்துச் சென்று பிணத்தை மயானத்தில் அடக்கம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததால் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்துவருகிறது. 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டைக்கு அருகேயுள்ள அயன் பேரையூரில் நேற்றுமுன்தினம் மாலை பெரியசாமி என்பவர் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கான மயானம் வெள்ளாற்றின் மறு கரையோரத்தில் உள்ளது. பெரியசாமியின்  உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது  வெள்ளாற்றில்  இடுப்பளவு தண்ணீர் ஓடியது. வேறு வழி மற்றும் பாதை இல்லாததால் உறவினர்கள் ஆற்றுத் தண்ணீரில் பெரியசாமியின் உடலைத்  தூக்கிச் சென்றனர். அப்போது ஒருவரை தண்ணீர் இழுத்துச் சென்றது. உறவினர்கள் கை கொடுத்துத் தூக்கி அவரை காப்பாற்றினார்கள். பின்பு ஆற்றைக் கடந்துசென்று பிணத்தை மயானத்தில் அடக்கம் செய்தனர். 

இதுபோன்ற நிலை வரும் காலங்களில் நிகழாத வகையில் மயானத்துக்குச் செல்ல வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.