வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (02/12/2017)

கடைசி தொடர்பு:07:50 (02/12/2017)

``விருது பெற்றால் மட்டும் போதுமா?” : மதுரை ஆட்சியருக்கு எதிராகக் கொந்தளிக்கும் மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகள்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் அவ்வப்போது நடந்துவரும் நிலையில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த சேவைக்கான தேசிய விருதை மதுரை ஆட்சியர் வீர ராகவராவ் பெற உள்ளார் என்று சமூக ஆர்வலர்களும் மாவட்ட ஆட்சியர் வட்டாரங்களும் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மத்திய அரசின் புதிய சட்டத்தை அமல்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தலைமை தாங்கினார். ``பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு புதிய சலுகைகள் அறிவித்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியது. இந்தச் சட்டத்தை அடுத்த ஆறு மாதத்தில் அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அறிவித்திருந்தது. ஆனால், ஓர் ஆண்டு ஆகியும் தமிழக அரசு அந்தப் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை” எனப் போராட்டத்தில் இறங்கியுள்ள மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த சேவை விருதைப் பெறும் முன் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையைத் தமிழக அரசிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.