பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம்... பறிபோனது மாணவி உயிர்!

தனியார் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் 8 வயது மாணவியான கனிஷ்கா பலியாகி இருக்கிறாள்.

கனிஷ்காதிருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த ஓட்டம்பட்டி கிராமத்தில் வசித்துவரும் கேசவன்-கமலம் தம்பதியரின் மகள் கனிஷ்கா. 8 வயதான இவர் துறையூர் வித்யாமந்திர் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

வழக்கம்போல் நேற்று காலை பள்ளி சென்ற இவர், மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குப் பள்ளிப் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

அந்தத் தனியார் பள்ளி வாகனத்தில் கிளீனர் இல்லை. ஓட்டுநர் மட்டுமே பள்ளிப் பேருந்தை இயக்கிவந்தார். பேருந்தில் பள்ளி ஆசிரியர்களே அட்டென்டர் வேலையைச் செய்துவந்ததாகக் கூறப்படுகிறது.

கொட்டம்பட்டி புதூர் - நரசிங்கபுரம் ரோடு சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மாணவி கனிஷ்கா  பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளி வேனில் இருந்த அட்டென்டரின் அஜாக்கிரதையால் கனிஷ்கா தவறிவிழுந்தாக புகார் கூறப்படும் நிலையில், இதுகுறித்து தகவலறிந்து வந்த துறையூர் போலீஸார், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிப் பேருந்தில் கிளீனர் இல்லாமல் பேருந்தை இயக்கியது ஏன்? பேருந்தில் கதவு இருக்கும்போது மாணவி எப்படி கீழே விழுந்தார்? கதவைத் திறந்தது யார்? என்கிற கேள்விகளை பொதுமக்கள் கேட்டனர்.

“இந்தப் பள்ளி வாகனம் மூலம் கடந்த சில மாதங்களில் நடந்த மூன்றாவது விபத்து இது. முறையான விசாரணை செய்தால் மட்டுமே உண்மை தெரியும்.. இனிமேலும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என்கிறார்கள் அப்பகுதி மக்கள். கண் இமைக்கும் நேரத்தில் கனிஷ்கா பிணமாகிப் போன சம்பவத்தால் துறையூர் வாசிகள் சோகத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள்.

இதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே பாலகுறிச்சியிலிருந்து துவரங்குறிச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து சொக்கம்பட்டி பகுதியில் வரும்போது தடம்புரண்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 6 மாணவ மாணவியர்களுக்கு காயம் ஏற்பட்டது. கோகிலா என்கிற மாணவி  துவரங்குறிச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து வளநாடு போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!