வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (02/12/2017)

கடைசி தொடர்பு:07:30 (02/12/2017)

''3 ஆண்டு சிறை... 'முத்தலாக்' தடுக்க புதிய சட்டம்..!'' குளிர் கால கூட்டத்தொடரில் வருகிறது

டிசம்பர் 15-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முத்தலாக் விஷயத்தில் புதிய சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வழிவகை செய்யும் ஷரத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.

முத்தலாக்

 

’முத்தலாக்'  இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றத்தில் ஏழு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு இவற்றை விசாரித்தது. தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதிகள் நாரிமன், லலித், குரியன், நசீர் ஆகிய நீதிபதிகள் அமர்வில் இடம்பெற்று இருந்தனர். இவ்வழக்கின் தீர்ப்பில், ‘முத்தலாக் முறையை ஆறு மாத காலம் நிறுத்திவைக்கிறோம். முத்தலாக் முறையைத் தடைசெய்ய விரும்பினால் நாடாளுமன்றம் சட்டம் இயற்றிக்கொள்ளலாம். மேலும், மத்திய அரசு ஆறு மாத காலத்துக்குள் சட்டம் கொண்டுவந்து முத்தலாக் முறையைத் தடை செய்யலாம். இதற்காகக் கருத்து வேறுபாடுகளை மறந்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து சட்டமியற்ற உதவ வேண்டும்’ என்று  உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் 3-வது வாரத்தில் தொடங்கி டிசம்பர் 3-வது வாரம் வரை நீடிக்கும். தற்போது, குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் நடத்த மத்திய அரசு ஆலோசித்தது. அதன்படி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 15-ம் தேதி ஜனவரி 5 -ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தக் கூட்டத்தொடரில் முத்தலாக் புதிய சட்டமசோதாவைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தில் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க ஷரத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தொடரில் ஜி.எஸ்.டி உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப ஏதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க