ராமேஸ்வரம் பகுதியில் கடல் சீற்ற பாதிப்புகள்குறித்து அதிகாரி ஆய்வு!

ராமேஸ்வரம் பகுதியில் கடல் கொந்தளிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகள்குறித்து வருவாய்த் துறை செயலாளரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான டாக்டர்.சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வருகிறது. இதன் விளைவாக உருவான ஒகி புயலின் தாக்குதலில் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளிலும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட கணிப்பாய்வு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள மாநில வருவாய்த் துறைச் செயலாளர் டாக்டர்.சந்திரமோகன், மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர்  வடகிழக்குப் பருவமழையின்போது மேற்கொண்ட, மேற்கொள்ள வேண்டிய பணிகள்குறித்து ஆய்வுநடத்தினர்.

ராமேஸ்வரம் பகுதியில் கடல் சீற்ற பாதிப்புகள் குறித்து ஆய்வு

பின்னர், பாம்பன் தெற்குவாடி, தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டினம் ஆகிய பகுதிகளில் கடல் கொந்தளிப்பால் ஏற்பட்ட பாதிப்புகள்குறித்து கணிப்பாய்வு அலுவலர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சியர் நடராஜன்  ஆகியோர் நேரில் ஆய்வுசெய்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரமோகன் ''பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் பகுதிகளில் கடல் சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பாதிப்புகள்குறித்த விவரங்கள் அனைத்தும் அரசுக்கு அறிக்கையாக அளிக்கப்பட்டு, இப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!