வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (02/12/2017)

கடைசி தொடர்பு:07:03 (02/12/2017)

திருச்சியில் கர்ப்பிணிப் பெண்கள் 400 பேருக்கு சமுதாய வளைகாப்பு!

தமிழக அரசு சார்பில் திருச்சியில் 400 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது.  கர்ப்பிணிப் பெண்களுக்கு மலர் தூவி மாவட்ட ஆட்சியர் இராசாமணி வாழ்த்தினார்.

வளையகாப்புதிருச்சி, கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் இன்று 400 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி நடத்திவைத்தார். 

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஷ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, இணை இயக்குநர் டாக்டர்.சம்சாத்பேகம், கி.ஆ.பெ. அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர்.அனிதா, மகளிர் திட்ட அலுவலர் பாபு, மாநகராட்சி நகரப் பொறியாளர் அமுதவள்ளி, யுகா தொண்டு நிறுவனம் அல்லிராணி பாலாஜி ஆகியோர் சகிதமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு மாலை அணிவித்து மேள தாளத்துடன் சீர் எடுத்துவந்து வளைகாப்பு நடத்தப்பட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மாலை அணிவித்து நலுங்கு வைத்து வளையலிட்டு சீர்வரிசையாக மஞ்சள், குங்குமம், பூ மற்றும் வளையல், சர்க்கரைப்பொங்கல், தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் தயிர்சாதம் உள்ளிட்ட ஐந்து வகையான கலவை சாதம் வழங்கப்பட்டது.  இந்த விழாவில்  கர்ப்பகால பராமரிப்புகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்காக பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.வளையகாப்பு

விழாவில் கர்ப்பிணிப் பெண்களை வாழ்த்தி பரிசுப் பொருள்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர் இராசாமணி,

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டதை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டம் முழு அளவில் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக இவ்விழா இந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும் கர்ப்பிணிகளில் 2160 நபர்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்படும் நல்ல கருத்துகளை மனதில்வைத்து செயல்பட வேண்டும். நீங்கள் நன்றாக உங்களது குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க