ஓர் உயிரை இழந்த பிறகும் இவ்வளவு அலட்சியம் ஏன்? - கொதிக்கும் கோவை

கோவை

மீபத்தில் வெளியான அறம், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய அளவில் தமிழர்களால்   கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இப்படி ஒரு கலெக்டர் நம்ம மாவட்டத்துக்கு இருந்தால் எப்படி இருக்கும் என்று நம் ஒவ்வொருவரையும் ‘அறம்’ ஏங்க வைத்தது என்றால், போலீஸ் எவ்வளவு பவர்ஃபுல், மக்களை காக்க இப்படியெல்லாமா போலீஸ்காரர்கள் போராடுவார்கள் என்று புருவம் உயர்த்த வைத்தான் தீரன். ஆனால், நிஜத்தில் ஓர்  அப்பாவி இளைஞரை காவு வாங்கிய பிறகும்  கட்- அவுட் விவகாரத்தில் கோவை மாவட்ட நிர்வாகம் நடந்துகொள்ளும்  விதம் மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

கோவை கட்-அவுட்

கோவையில் டிசம்பர் 3-ம் தேதி, கொண்டாப்டப்பட இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு நவர்பர் 20-ம் தேதியிலிருந்தே அ.தி.மு.கவினர் கட்-அவுட் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நிச்சயம் இது போக்குவரத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தே, அவினாசி சாலையில் பல இடங்களில் பிரமாண்டமான அலங்கார வளைவு அமைத்தார்கள். சாதாரணமாகவே அவினாசி சாலை போக்குவரத்து நெரிசலால் திணறும். இந்தச் சூழலில் கட்-அவுட்களால் பாதி சாலையை மறைத்துவிட்டனர். ’யாரை காவு வாங்கப் போகிறதோ?’ என்று கட்-அவுட் கம்பங்களின் படங்களோடு முகநூல் பதிவுகள் வலம்வர ஆரம்பித்தன.

சமூக ஆர்வலர் செல்வராஜ், அ.தி.மு.கவினர் அமைத்திருக்கும் கட்-அவுட்கள் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கோவை கலெக்டர், கமிஷனர் என்று பலரிடம் மனுகொடுக்கப் போனார். அவரது புகாரை யாரும் கண்டுகொள்ளவில்லை. மறுநாள் மருத்துவக்கல்லூரி அருகே வைக்கப்பட்டிருந்த கட்-அவுட்டால் விபத்தில் சிக்கி பரிதாமாக உயிரிழந்தார் ரகுபதி. WHO KILLED RAGU? என்று சமூக வலைத்தளங்களில் கொந்தளிக்கத் தொடங்கினர் சமூக ஆர்வலர்கள். “அந்த கட்-அவுட்களுக்கு எந்தவிதமான அனுமதிகளும் அளிக்கப்படவில்லை. இன்னும் ரெண்டு மணி நேரத்தில் எல்லா கட்-அவுட்களும் அப்புறப்படுத்தப்படும்” என்று  பதிலளித்தார் மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன். இதனையடுத்து, விபத்து நடந்த இடத்தில் இருந்த கட்-அவுட்டுகள் அகற்றப்பட்டன. அதேநேரத்தில், ரகுவின் மரணம்குறித்து பேட்டியளித்த அமைச்சர் வேலுமணியோ கட்-அவுட்களுக்கு முறையாக அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது என்றார்.

கோவையில் கட்-அவுட்கள்

இந்நிலையில் தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் தொடுத்த பொதுநல வழக்கில், ' அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருக்கும் பிளெக்ஸ்களையெல்லாம் உடனே அகற்ற வேண்டும்' என்று தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.  நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, ‘அனுமதியின்றி  வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை ஆய்வுசெய்து அகற்ற வேண்டுமென உத்தரவு பிறப்பித்து ஆணை வெளியிட்டார் மாநகராட்சி ஆணையர். நீதிமன்ற உத்தரவை மதித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்தாலும், கோவை  போலீஸ் கமிஷனரோ, அ.தி.மு.கவினர் வைத்துள்ள பிளெக்ஸ்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கிறார். ஆம்! 18 பிளெக்ஸ்களுக்கு ஒரு போலீஸ் வீதம் சிட்டிக்குள் இருக்கும் ஒட்டுமொத்த பிளெக்ஸ்களுக்கும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. 

கலெக்டர் ஹரிஹரின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எதுவாக இருந்தாலும் 3-ம் தேதிக்கு மேல் பேசிக்கலாம். விழா நல்லபடியா முடியட்டும்” என்று பதிலளித்திருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!