வெளியிடப்பட்ட நேரம்: 09:37 (02/12/2017)

கடைசி தொடர்பு:15:36 (02/12/2017)

அடுத்த மூன்று நாள்களுக்கு மழை தொடரும்- மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை

சென்னையில் அடுத்த மூன்று நாள்களுக்கு மழை தொடரும் என மத்திய நீர்வளத்துறை ஆணையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

மழை

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஒகி புயலால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில நாள்களாக விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. 

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் மத்திய நீர்வளத்துறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. ஒகி புயலின் காரணமாக தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் தொடர்ந்து மிதமானது முதல் கனமழை வரையில் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரியைப் பொறுத்தவரையில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழு மண்டலம் கரையைக் கடக்கும் வரையில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென் தமிழகத்தில் பல ஏரிகளும், அணைகளும் நிரம்பிக் காட்சியளிக்கின்றன.