10 ரூபாய்க்கு அளவில்லா கம்பங்கூழ்; தருமபுரியைக் கலக்கும் கூழ்கடை அண்ணாதுரை

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம்தான் சோலைக்கொட்டாய். இந்தக் கிராமத்தில் வசிக்கும் அண்ணாதுரை என்ற 65 முதியவர் தன் அசத்தலான ஐடியாவால் தருமபுரியில் கலக்கிவருகிறார்.

கம்மங்கூழ்

விவசாயத்தை உயிர் மூச்சாகக் கொண்ட அண்ணாதுரை, தன் நிலத்தில் விளைந்த தானியங்களைக்கொண்டு ஏதாவது கடை தொடங்க எண்ணி சாலை ஓர கம்பங்கூழ் தள்ளுவண்டிக் கடை ஒன்றைத் தொடங்கினார். ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த அண்ணாதுரையின் கடைக்கு மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. காரணம் கம்மங்கூழோடு சேர்த்து அண்ணாதுரையின் பாசமும் வாடிக்கையாளர்களின் மனதைக் கொள்ளைகொண்டதே.

அண்ணாதுரையின் கடைக்கு கூட்டம் பெருக மற்றொரு காரணமும் இருந்தது. அது கம்பங்கூழின் கிராம மனம் நிறைந்த சுவை. அண்ணாதுரையின் நோக்கம் என்னவென்றால் அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வயிற்றோடு, மனதும் நிறைந்து செல்ல வேண்டும் என்பதுதான். எனவே, பத்து ரூபாய்க்கு அளவில்லா கம்பங்கூழ் தர முடிவெடுத்து அதன்படி வழங்கியும் வருகிறார். அதன்படி கடை திறந்து இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பத்து ரூபாய்க்கு அளவில்லா கம்பங்கூழ் கொடுத்துவருகிறார்.

இதில் அதிசயம் என்னவென்றால், அந்தச் சாலையில் இருபதுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அவை அனைத்திலும் விளம்பர பலகைகள் தொங்கவிடப்பட்டிருக்கும். ஆனால், அண்ணாதுரை கடையில் மட்டும் அவ்வாறு பலகைகள் எதுவும் இல்லை. ஏன் விளம்பரப் பலகை வைக்கவில்லை என்று அவரிடம் கேட்டால், ’என்னால் மற்றவர்களின் கடை பாதிக்கப்பட  வேண்டாம்’ என்கிறார். மேலும், அவர் கூறுகையில், “ஒரு நாளைக்கு 200 ரூபாய் கூலி கிடைக்கும். காலை எட்டு மணிக்குத் தொடங்கி மாலை ஏழு மணி வரை நம்ம கடையில் வியாபாரம் நடக்கும். குழந்தைகளுக்கு நம்ம கடையில் கம்பங்கூழ் இலவசம்” என்றார்.

சாதாரண கூலித்தொழிலாளி முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை இவரது வாடிக்கையாளர்களின் கூட்டம் பெரியது. அனைவருக்கும் 15 ரூபாய்க்கு அளவில்லா உணவு வழங்க வேண்டும் என்பதே அண்ணாதுரையின் ஆசையாம். ஆனால், தனக்கு போதுமான வசதி வாய்ப்பு அமையாததால் ஒரு சிறிய தள்ளுவண்டியில் தன் விருப்பத்தை நிறைவேற்றி வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!