வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (02/12/2017)

கடைசி தொடர்பு:11:30 (02/12/2017)

டெங்கு ஒழிப்புப் பணிகள் மும்முரம்! அதிரடி கிளப்பும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்!

கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்ட டெங்குக் காய்ச்சல் மரணங்கள், தமிழகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்தன. டெங்குவைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகளும், சுகாதாரத்துறை அமைச்சரும் தினமும் மருத்துவமனைகளுக்கு விசிட் அடித்தார்கள். எதிர்க்கட்சிகளும் நிலவேம்புக் கஷாயம் கொடுக்கத் துவங்கினார்கள். இதனால் பரபரப்பாக காணப்பட்டது தமிழகம். டெங்குக் கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அபராதம் விதிக்கத் தொடங்கினார். தமிழகம் முழுவதும் மற்ற மாவட்ட ஆட்சியர்கள் இதை பின்பற்றினார்கள்.

டெங்கு

வடகிழக்குப் பருவமழை பெய்யத் தொடங்கியதால் தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் வெள்ள நிவாரணம் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாவட்ட ஆட்சியர் ஈடுபட்டுவந்தார். இதனால் டெங்கு பற்றிய பரபரப்புகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிப்போனது. இந்த நிலையில், மீண்டும் டெங்குக் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா. கிராமப்புறப் பகுதிகளில் 21 லட்சம் ரூபாயும், நகராட்சி பகுதிகளில் 17 லட்சம் ரூபாயும், பேரூராட்சி பகுதிகளில் ஒரு லட்சம் ரூபாயும் அபராதம் என மொத்தம் 39.36 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருந்தார். அதில் 27.09 லட்சம் ரூபாய் இதுவரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. வீடுகள், வணிக வளாகங்கள், கடைகள் என தெருத்தெருவாக அதிகாரிகள் டெங்கு ஒழிப்புப் பணிக்காக வலம் வரத் தொடங்கிவிட்டார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க