வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (02/12/2017)

கடைசி தொடர்பு:11:50 (02/12/2017)

தொடர்மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாள்களாகத் தொடர் மழை பெய்துவருவதால் கோவில்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தீப்பெட்டி ஆலைகளில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படாததால் ரூ.15 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. 

match work

தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், வேலூர் மற்றும் தர்மபுரி  ஆகிய மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி நடந்துவந்தாலும்,   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிதான் தீப்பெட்டி உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏற்கெனவே சிறுதொழில்கள் பட்டியலிலிருந்து தீப்பெட்டித்தொழில் நீக்கம், தீப்பெட்டிக்கான மூலப்பொருள்கள் விலை உயர்வினால் தீப்பெட்டிப் பண்டல்களில் கட்டுப்படியாகாத விலை மட்டுமல்லாமல் தீப்பெட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரியாலும் இத்தொழில் நலிவடைந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 4 நாள்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. தீப்பெட்டி உற்பத்திக்கான ரசாயன மருந்துகளை காய வைப்பதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை இல்லாததால் இதன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பகுதி நேர தீப்பெட்டி ஆலைகளும், முழு நேரத் தீப்பெட்டி ஆலைகளும் இயங்கவில்லை. 

பகுதி மற்றும் இயந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும் லாரி செட்களில்  ரூ.15 கோடி மதிப்பிலான தீப்பெட்டிப் பண்டல்கள் வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்கம் அடைந்துள்ளன. லாரிகளுக்கும் தீப்பெட்டி லோடு கிடைக்காமல் வெற்று லாரியாக செட்டுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தீப்பெட்டித் தொழிலின் சார்பு தொழில்களான தீக்குச்சி, புளூமேட்ச் பேப்பர், குளோரட், அட்டை உற்பத்தி ஆகியவையும் விற்பனை இல்லாமல் பாதிப்படைந்துள்ளன. இதனால் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு அடைந்துள்ளனர். 

match works

”தீப்பெட்டி உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் தீக்குச்சிகள் வெயிலில் காய வைக்கப்பட்டு, கட்டைகளில் அடுக்கி வைக்கப்படுகிறது. தொடர்ந்து குச்சியின் முனையில் மருந்து வைக்கப்பட்டு மீண்டும் வெயிலில் காய வைக்கப்படுகிறது. மேலும், தீக்குச்சியை அடைக்கப் பயன்படும் அடிப்பெட்டி, மேல்பெட்டி, லேபிள் ஒட்டப்பட்ட தீப்பெட்டிகள் ஆகியவையும் வெயிலில்தான் காய வைக்கப்படுகிறது. இப்படி தீப்பெட்டி சார்ந்த எல்லாத் தொழிலும் வெயிலை மட்டுமே நம்பியுள்ளது. கந்தகத் தொழில் எனப்படும் தீப்பெட்டித் தொழிலுக்கு மழைக்காலம் வந்தாலே அலர்ஜிதான். உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி பண்டல்கள்மீது ஈரக்காற்று பட்டாலே பயனற்றுப் போய்விடும். மழையால் உற்பத்தி, ஏற்றுமதி இரண்டுமே கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது” என்கின்றனர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க