வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (02/12/2017)

கடைசி தொடர்பு:13:02 (02/12/2017)

மின்கம்பி, தனியார் சுவர் எதையும் விட்டுவைக்காத தமிழக அரசு: என்னங்க சார் உங்க சட்டம்..?

ஓர் உயிரைக் காவு வாங்கிவிட்டு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழவைக் கொண்டாடி வருகிறது தமிழக அரசு. ரகு மரணத்துக்கு, அலங்கார வளைவுதான் காரணம் என்று அனைவரும் குற்றம் சாட்டினாலும் ரகுவின் மறைவுக்கு லாரிதான் காரணம் என்று முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை கற்பூரம் அடித்து சத்தியம் செய்துவருகிறார்கள். ரகுவின் குடும்பத்தினரை இதுவரை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லாத தமிழக அரசு, பேனர்களுக்கு ஷிப்ட் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு போட்டிருப்பது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேனர்

இதனிடையே, நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றும் பணிகளில் மாநகராட்சித் தீவிரமாக இறங்கி செயல்பட்டது. தற்போதுவரை, கோவை மாநகராட்சி பகுதிகளில் 270 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், தற்பாது இருக்கும் பேனர்களிலுமே 90 சதவிகித பேனர்கள் விதிகளை மீறித்தான் வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் மனோஜ், ``அவிநாசி சாலையில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட பேனர்கள் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ளன. மின் கம்பங்களில் பேனர் கட்டுவது, பாதையை மறித்து பேனர் கட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேனர்

நடைபாதைகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் ஒரு பேனருக்கும் இன்னொரு பேனருக்கும் இடையே இடைவெளியே இல்லாமல் வைக்கப்பட்டிருக்கின்றன. இதன்காரணமாகப் பெரும்பாலான இடங்களில் மக்கள் வெகுதூரம் சென்று சுற்றி வர வேண்டியதாக இருக்கிறது. விமான நிலையம் எதிரில் 50 அடி உயரத்தில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அவினாசி சாலை மட்டுமல்ல. நகரின் மற்ற சாலைகளிலும் அ.தி.மு.க-வினர் விதிகளை மீறி பேனர் மற்றும் கட் அவுட்களை வைத்துள்ளனர்.

மேலும், பல பகுதிகளில் புதிதாகப் பேனர் அமைக்க குழிகள் தோண்டப்பட்டுள்ளன. சம்பிரதாயத்துக்காகச் சில இடங்களில் மட்டும் பேனர்கள் அகற்றப்படுகின்றன. மக்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் பேனர்கள் அப்படியேதான் இருக்கின்றன. நடைபாதையை மறித்துக் கட்டப்பட்டிருந்த சில பேனர்கள், அங்கிருந்து அகற்றித் தனியார் காம்பவுண்ட் வாலில் கட்டப்படுகிறது" என்றார்.