வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (02/12/2017)

கடைசி தொடர்பு:13:12 (02/12/2017)

`பாதுகாவலர்களா குண்டர்களா?’ - முதல்வரைச் சுற்றும் சர்ச்சை

இன்று காலை சேலம் திருவாக்கவுண்டனூர் பை-பாஸ் மேம்பாலம் திறப்பு விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்திருந்தார். அந்நிகழ்ச்சியைக் கவரேஜ் செய்வதற்காகப் பத்திரிகையாளர்கள் அதிகளவில் கூடியிருந்தனர். பத்திரிகையாளர்களைக் கூட்டத்தினுள் விடாமல் முதல்வரின் பாதுகாவலர்கள் வெளியில் தள்ளினர். இந்தக் கூட்டத்தில் இருந்த 'காலைத் தகவல்' நாளிதழின் நிருபர் விஸ்வநாதன், `பத்திரிகையாளர்’ என்று அடையாள அட்டையைக் காட்டிய பிறகும் மாற்றுத்திறனாளியான அவரை முதல்வரின் பாதுகாவலர்கள் கடுமையாகத் தாக்கினர். 

சேலம் திருவாக்கவுண்டனூர் பை-பாஸ் சாலையில் பெங்களூருக்குச் செல்லும் வாகனங்கள் நேராகச் செல்வதற்காக 26.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு, அதைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார். அதற்கான நிகழ்ச்சி காலை 8:30 மணிக்குத் தொடங்கியது. மாவட்ட நிர்வாகம் சரியாகத் திட்டமிடாததால் ரிப்பன் வெட்டுவதற்கு அங்கும் இங்குமாக 4 இடங்களுக்குப் பத்திரிகையாளர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆம்புலன்ஸ்கூட நகர முடியாத நிலை உருவானது. ஆட்சியர் ரோகிணியும் குறிப்பிட்ட நேரத்துக்கு வராமல் காலம் தாழ்த்திவந்தார். இதனால் கோபம் அடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்கள்தொடர்பு அலுவலர் சேகரிடம் கடிந்துகொண்டார். மேலும், முதல்வரின் பாதுகாவலர்கள் என்ற அடையாளத்துடன் வந்தவர்கள் தாக்கியதில், ”இவர்கள் முதல்வரின் பாதுகாவலர்களா குண்டர்களா” என்று கூடியிருந்தவர்கள் முகம் சுளித்தார்கள்.