வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (02/12/2017)

கடைசி தொடர்பு:12:50 (02/12/2017)

தினகரனுக்கு செக் வைத்த தேர்தல் அதிகாரி? - ஆதரவாளர்கள்மீது காவல்நிலையத்தில் புகார்

விதிமுறையை மீறி வாகனத்தில் வந்ததாக டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள்மீது தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சுப்பிரமணியன் புகார் கொடுத்துள்ளார்.

இரட்டை இலைச் சின்னத்துக்கு சசிகலா- பழனிசாமி அணிக்கு இடையே போட்டி நிலவிவந்த நிலையில், தேர்தல் ஆணையம் பழனிசாமி அணிக்கு சின்னத்தை வழங்கியது. இதை எதிர்த்து தினகரன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். "எங்கள் கருத்தை கேட்காமல் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரயிருக்கிறது.

இதனிடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பழனிசாமி அணி சார்பில் மதுசூதனனும் சசிகலா அணி சார்பில் டி.டி.வி. தினகரனும் களத்தில் நிற்கின்றனர். இரண்டு வேட்பாளர்களும் நேற்று தண்டையார் பேட்டையில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியிடம் வேட்பு மனுக்களைத் தாக்கல்செய்தனர். ஆனால், தினகரனுக்கு மாற்று வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, விதிமுறைகளை மீறி தினகரன் தனது ஆதரவாளர்கள் வெற்றிவேல், கலைராஜன் உள்ளிட்ட 200 பேருடன் வந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில், தேர்தல் விதிகளை மீறி வாகனங்களில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்ததாக தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், கலைராஜன் உள்ளிட்டவர்கள்மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சுப்பிரமணியன் இன்று புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு கடந்த 27-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன், சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரன் உட்பட 38 பேர் தற்போது வரை வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுத் தாக்கல்செய்ய கடைசி நாள் டிசம்பர் 4-ம் தேதியாகும். வேட்புமனுக்கள் பரிசீலனை டிசம்பர் 5-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் டிசம்பர் 7-ம் தேதியாகும். தினகரனுக்கு மாற்று வேட்பாளர் நிறுத்தப்படாத நிலையில், அவரது ஆதரவாளர்கள்மீது தேர்தல் நடத்தும் அலுவலரே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது சசிகலா அணி தரப்பினரை அதிர்ச்சியடையவைத்துள்ளது.