வாடகைக் கொடுக்காத ரயில்வே! மாமல்லபுரம் ரயில் முன்பதிவு மையம் மூடல்?

மாமல்லபுரத்தில் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. ரயில்வே நிர்வாகம் இந்து அறநிலையத்துறைக்குச் சில ஆண்டுகளாகவே வாடகைக் கொடுக்காததால், வாடகை உரிமத்தை ரத்து செய்வதாக இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

மாமல்லபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்துக்கு இந்தியா மட்டுமல்லாது, உலக அளவிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகிறார்கள். கல்பாக்கம் அணுசக்தி நகரியம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளில் உள்ளவர்கள் ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்காக முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அப்போதைய மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கடந்த 2003-ம் ஆண்டில் மாமல்லபுரத்தில் பயணிகள் முன்பதிவு மையத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்து அறநிலைத்துறையின் கீழ் உள்ள நெம்மேலி ஆளவந்தார் அறக்கட்டளைத் திருமண மண்டபத்தில் மாத வாடகை அடிப்படையில் இந்த முன்பதிவு மையம் செய்யப்பட்டுவருகிறது. தொடக்கத்தில் முறையாக வாடகை செலுத்திய ரயில்வே நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாகவே வாடகையைச் செலுத்தவில்லை. பலமுறை இந்து அறநிலைத்துறை கேட்டுக்கொண்டும் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் வாடகை உரிமத்தை ரத்து செய்வதாக இந்து அறநிலைத்துறை அறிவித்துள்ளது.  கடந்த 2012 ஜூலை முதல் 2017 ஜூன் வரை 6.91 லட்சம் வாடகைத் தொகை நிலுவையில் உள்ளதால், பாக்கி வாடகையைச் செலுத்தி ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க அறநிலையத்துறை வலியுறுத்திவந்தது.

ஸ்மார்ட் போன், இணைய வசதிகள் அதிகமான நிலையில் ரயில்வே நிர்வாகம் வாடகைப் பாக்கியைக் கொடுத்து, மீண்டும் முன்பதிவு மையத்தைச் செயல்படுத்துமா என்பது சந்தேகம். வாடகை ஒப்பந்தம் ரத்து செய்வதாக இந்து அறநிலையத்துறை அறிவிப்பு வெளியானதால், டிசம்பர் 2017 வரை மட்டுமே ரயில்வே முன்பதிவு நிலையம் செயல்பட முடியும். இதனால் மாமல்லபுரம் பகுதியில் உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!