அரசின் அலட்சியம் நிலச்சரிவில் முடிந்த சோகம்... எப்படியிருக்கிறது இன்று மேகமலை?! #SpotVisit

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒன்றான, பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த வனப்பரப்பு மேகமலை. எங்கும் காணக்கிடைக்காத பல அரிய உயிரினங்களின் இருப்பிடம். வைகை ஆற்றின் பிறப்பிடம். இப்படி மேகமலையைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். பல சிறப்புகள் பெற்ற மேகமலை வனப்பகுதியில் கடந்த பல வருடங்களாக வன அழிப்பு தொடர்ந்து நடந்துவந்தது. சமீபத்தில் தனியார் காபி முதலாளிகள் வனத்தை அழித்து சாலை போட்டனர். அதை வெளிக்கொண்டுவந்தது விகடன். மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக இன்னும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாத சூழலில், அடுத்தகட்ட வன அழிப்பைத் தொடங்கியது நெடுஞ்சாலைத்துறையும், மாவட்ட நிர்வாகமும்.

மேகமலை

சாலையும் சறுக்கலும் :-

சுமார் 87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேகமலைச் சாலைப் பணிகள் தொடங்கப்பட்டன. பணிகள் நடக்கும் பகுதி வன உயிரினக் காப்பகம் என்பதால் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் அனுமதி பெறப்பட்டது. அப்போது மாவட்ட நிர்வாகத்துக்கும், நெடுஞ்சாலைத் துறையினருக்கும் சில வழிகாட்டுதல்களைக் கொடுத்தது பசுமைத் தீர்ப்பாயம். அதன்படி 5.5 மீட்டர் மட்டுமே சாலையை அகலப்படுத்த வேண்டும். சாலைப் பணி இரவில் நடக்கக் கூடாது. வெடிப் பொருள்கள் பயன்படுத்தக் கூடாது. வன விலங்குகளை அச்சுறுத்தக் கூடாது. அரிய மரங்களை வெட்டக் கூடாது. மரங்கள் வெட்டினால், அதை உரிய முறையில் வனத்துறை அனுமதி வாங்க வேண்டும். வன அமைதிக்கும், அங்கு வாழும் அரிய உயிரினங்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது உட்பட சில வழிகாட்டுதல்களைக் கொடுத்தது. ஆனால், அதற்கு நேர் எதிராக செயல்பட்டது மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும். அதை கை கட்டி வேடிக்கைப் பார்த்தது வனத்துறை.

12 மீட்டர்களிலிருந்து 15 மீட்டர்கள் வரை சாலை அகலப்படுத்தப்பட்டது. அதற்காகப் பல வருட பழைமையான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. பாறைகளுக்கு வெடி வைக்கப்பட்டன. தகர்க்கப்பட்ட  பாறைகள் மலைச்சரிவில் கொட்டப்பட்டன. இப்படி மேகமலை மீதான யுத்தத்தை செய்துகொண்டிருந்தார்கள். அதை 29.10.2017 ஜூனியர் விகடனில் விரிவாகப் பதிவுசெய்தோம். அதில், நடைபெற்ற விதிமீறல்களைச் சுட்டிக்காட்டியது மட்டுமல்லாமல், அதனால் ஏற்படும் விபரீதங்களையும் எடுத்துக்காட்டினோம். அன்று சொன்னது இன்று நடைபெற்றிருக்கிறது. மேகமலைச் சாலையில் சுமார் 20-க்கு மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. சாலைதோறும்  பாறைகள். போக்குவரத்து முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. மேகமலையில் உள்ள ஹைவேவிஸ், மணலாறு, அப்பர் மணலாறு, மகராஜமெட்டு, இரவங்கலாறு, வட்டப்பாறை போன்ற இடங்களில்வசிக்கும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியுலகத் தொடர்பை முற்றிலும் இழந்திருக்கிறார்கள். வெள்ளி மதியம் முதல் தற்போது வரை மேலே உள்ள மக்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. தொடர் மழை காரணமாக சாலை சீரமைப்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இன்னும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் செல்ல அச்சம் தெரிவிக்கிறார்கள். சீரமைப்புப் பணிகள் முழுமையாக முடிய சில வாரங்கள்கூட ஆகலாம் என்பதே கள நிலவரம்.

மேகமலை

நிலச்சரிவு ஏற்பட என்ன காரணம்?

மேகமலை மற்ற மலைப்பகுதிகளைவிட சற்று வித்தியாசமான தோற்றமும் எங்குமே காணக்கிடைக்காத பல அரிய உயிரினங்களின் இருப்பிடமாகவும் திகழும் பகுதி. இப்பகுதியில் சாலை போட அனுமதிக்கப்பட்ட அளவைவிட இரண்டு மடங்கு அதிகமான அகலத்தில் சாலை போடப்பட்டதே இந்த நிலச்சரிவுக்கு மிக முக்கியக் காரணம். சாலை அகலப்படுத்த மலைச் சரிவுகள் வெட்டப்பட்டன. இதற்காகப் பல மரங்கள் வெட்டப்பட்டன. மண்ணைப் பற்றிக்கொண்டு இருக்கும் மரங்கள் வெட்டப்பட்டதால் மண்ணில் நிலைத்தன்மை இன்றியே பல இடங்களில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இது மட்டுமட்டுமல்லாமல், மலையிலிருந்து உருவாகி கீழிறங்கும் பல சிற்றோடைகளின் வழித்தடத்தை மறித்து அதன் பாதையை மாற்றியதும் தொடர் நிலச்சரிவுக்கு மிக முக்கியக் காரணம். வழி மாறிய சிற்றோடைகளே பல இடங்களில் சாலையை அரித்து சரிவை ஏற்படுத்தியிருக்கிறது. 

நடந்துவரும் மக்கள் : 

தென் பழனியிலிருந்து ஹைவேவிஸ் வரை 36 கிலோமீட்டர் சாலையையும் மக்கள் தற்போது நடந்தே கடக்க வேண்டியுள்ளது. மேலே இருந்து நடந்து வந்துகொண்டிருந்தவர்களிடம் பேசியபோது, "நேற்று மதியம் முதல் இங்கே கனமழை. மேலிருந்து கீழே இறங்க முடியாதபடி சாலை முழுவதும் பாறைகள், மரங்களாகக் கிடக்கின்றன. அதில் பாம்பு, பூரான் போன்ற விஷ உயிரினங்கள் இருக்கின்றன. யானையைப் பார்த்தோம். நடந்து வரக்கூட பயமாக இருக்கிறது. எப்போது எங்கு சரிவு ஏற்படும் என்று தெரியவில்லை. மழையும் விட்டபாடில்லை. இப்படியே நிலைமை இருந்தால் மேலே இருக்கும் மக்களின் நிலை மிக மோசமாக மாறிவிடும். எல்லாவற்றுக்கும் இந்தச் சாலைப்பணிதான் காரணம். முன்பெல்லாம் எவ்வளவு மழை பெய்தாலும் ஒன்றும் ஆகாது. ஆனால், இவர்கள் சாலையை அகலப்படுத்தியதுதான் இவ்வளவு இடங்களில் நிலச்சரிவு ஏற்படக் காரணம். அரசு உடனே சாலை சீரமைப்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும்" என்றார். பலரும் நடந்தே வந்துகொண்டிருந்தனர். காலையில் ஆரம்பித்த நடைப்பயணம் இரவையும் தாண்டி நீடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இடையிடையே பாறைகளும் மண்ணும் சரிவதால் அச்சத்தில்தான் அவர்கள் நடந்துவருகிறார்கள்.

மேகமலை

இனி என்ன செய்யலாம்?

தென்பழனி முதல் கர்டணா எஸ்டேட் வரை ஓரளவுக்குச் சாலை நன்றாக இருப்பதால், மலை மேல் இருந்துவரும் மக்களுக்கு வாகன வசதியைச் செய்துகொடுக்கலாம். மலையில் இருக்கும் ஒரே தொலைத்தொடர்பு நெட்வொர்க்கான பி.எஸ்.என்.எல் வேலை செய்து பல மாதங்கள் ஆவதால், அதை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு நாள்களுக்கு ஒருமுறை செல்லும் மக்களுக்குத் தேவையான காய்கறி, பால் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் தற்போது தடைபட்டிருப்பதால், அதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் உட்பட வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் மேகமலை மக்களின் நிலையை நேரடி ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட வேண்டும். மலை மேலே வசிக்கும் மக்களின் நிலையைப் பற்றிய அச்சம் நேரம் செல்லச்செல்ல அதிகரிக்கும் சூழலில், அச்சத்தைப் போக்கும் கடமை மாவட்ட நிர்வாகத்துக்கு உண்டு. அதை உடனே செய்ய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!