வெளியிடப்பட்ட நேரம்: 14:13 (02/12/2017)

கடைசி தொடர்பு:14:13 (02/12/2017)

ஆர்ப்பரிப்புக்குப் பின் அமைதி..! குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குதூகலம்

நெல்லை மாவட்டத்தில் மழை சற்று ஓய்ந்திருப்பதால் குற்றாலம் அருவிகளில் ஏற்பட்டிருந்த வெள்ளம் குறைந்துள்ளது. அதனால் ஐந்தருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குற்றாலம் வெள்ளம் வடிந்தது

ஓகி புயல் காரணமாக நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 3 நாள்களாக கனமழை பெய்தது. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்தது. அதனால் நீர்வரத்து அதிகரித்ததால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துவருகிறது. அத்துடன் குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவையும் தாண்டி தண்ணீர் கொட்டியதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாத நிலைமை உருவானது.

மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டிய தண்ணீர், பெண்கள் குளிக்கும் பகுதியில் இருந்த பாதுகாப்பு வளைவுகளையும் வெள்ளம் அடித்துச் சென்றது. ஐந்தருவியில் கடும் தண்ணீர் காரணமாக அனைத்துக் கிளைகளும் ஒன்றிணைந்து இரு பிரிவுகளாக விழும் அளவுக்கு வெள்ளம் அதிகமாக வந்தது. பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தால் கொட்டிய தண்ணீர் நடைபாதை வரையிலும் பெரும் வெள்ளமாக வந்தது. இது தவிர, புலி அருவியிலும் வெள்ளம் கடுமையாக இருந்தது. 

அதனால் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. கடந்த 3 நாள்களாக இந்தத் தடை நீடித்தது. இந்த நிலையில், இன்று மழை குறைந்தது. அதனால் அருவிகளுக்கு வரக்கூடிய வெள்ளத்தின் அளவு குறையத் தொடங்கி இருக்கிறது. அதன் காரணமாக மூன்று தினங்களுக்குப் பின்னர், ஐந்தருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிற அருவிகளில் வெள்ளம் வடிந்த பின்னர் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாதுகாப்பு கம்பிகள் சேதம்

அத்துடன், மணிமுத்தாறு அருவியில் 3 நாள்களாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பெய்த பெருமழையின்போது, பொதுமக்கள் குளிக்கும் பகுதியில் இருந்த தடுப்புக் கம்பிகள், பாதை ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், நவம்பர் 1-ம் தேதி முதல் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. கடந்த 3 நாள்களாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அருவிக்குச் செல்லும் சாலையில் பொதுமக்களை வனத்துறையினர் அனுமதிக்கவில்லை.