குடிசைப் பகுதி மக்கள் அப்புறப்படுத்தப்படும் விவகாரம்... முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்

கூவம் மற்றும் அடையாறு ஆற்றின் கரையில் வாழும் மக்களை அருகிலேயே மறுகுடியமர்த்த வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

சென்னைப் பெரு நகரம் முழுவதும் கூவம் மற்றும் அடையாறு ஆற்றின் கரையோரங்களில் வசித்துவரும் குடிசைப்பகுதி மக்களைத் தமிழக அரசு அப்புறப்படுத்திவருகிறது. அவர்களுக்குச் சென்னையிலிருந்து வெகு தொலைவில் வீடுகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'தமிழக அரசு நீர்வழிக் கரையோர மக்களையும் இதர குடிசைப் பகுதி மக்களையும் வெளியேற்றி, புறநகர் பகுதியின் வெகுதூரத்தில் மறு குடியமர்த்தி வருகிறது. 01.12.2017 அன்று காலை பல்லாவரம் அனகாபுத்தூர் பகுதியிலும் சேப்பாக்கம் 62 வது வட்டத்தில் ஐந்து குடிசைப் பகுதிகளையும் நான் பார்வையிட்டேன். இங்கு பல அத்துமீறல்கள் நடைபெறுவதை அறிய முடிந்தது.

அனகாபுத்தூர் 18 வது வார்டில், தாய்மூகாம்பிகை நகர், டோபி கானா தெரு, 17 வது வார்டில் ஸ்டாலின் நகர், காயிதே மில்லத் நகர், திருமலை நகரின் ஒரு பகுதி, 1 வது வார்டில் சாந்தி காலனி ஆகிய இடங்களில் சுமார் 670-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கத் தொடங்கியுள்ளனர். இதேபோன்று சிந்தாதிரிப்பேட்டையில் சுமார் 1,500 வீடுகளை அப்புறப்படுத்தும் முஸ்தீபுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவை தவிர அண்ணாநகர், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிகளுக்குள் பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகளை வெளியேற்ற திட்டமிட்டுள்ளனர்.

அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றிலிருந்து அரசுத் திட்டமிட்ட 50 மீட்டர் தொலைவில் உள்ள வீடுகள் ஓரளவு உள்ளன. ஆனால், அதிகாரிகள் இதைக் காரணமாக வைத்து 50 மீட்டருக்கு வெளியே உள்ள வீடுகளையும் இடிக்கத் தொடங்கியுள்ளனர். வட்டாட்சியர், ஆர்.டி.ஓ மற்றும் இதர அதிகாரிகள் 50 மீட்டருக்கு வெளியே உள்ள மக்களை அழைத்து, நீங்களாகவே காலி செய்துவிடுங்கள் இல்லையேல் நாங்கள் இடித்துவிடுவோம், ஒரு பொருளையும் எடுக்க விடமாட்டோம் என்று மிரட்டுவதாக மக்கள் கண்ணீருடன் கூறுகின்றனர். ஒரு புறம் வெகுதொலைவில் வீட்டைக்காட்டி வெளியேற்றுவது, வெளியேறவில்லையென்றால் அதுவும் கிடைக்காது என மிரட்டுவது என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அனகாபுத்தூரில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படும். இதே அளவு வேலைவாய்ப்பு பறிபோகும். பல பெண்கள் வீட்டுவேலை, முறைசாரா, சிறு வியாபாரம் செய்து வருவது பறிக்கப்படுகிறது. மறுபுறத்தில் பெரும் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் 50 மீட்டருக்கு உள்ளேயும் ஆற்றுக்குள்ளும் வீடுகள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதுபோன்ற பல நிறுவனங்களை அரசும் அரசு நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை.

1. எனவே, நீர்வழிக் கரையில் 50 மீட்டருக்குள் குடியிருக்கும் மக்களுக்கு அருகிலேயே வீடுகட்டிக் கொடுக்க வேண்டும். அகற்றப்படும் இடங்களின் அருகில் இதற்கான வாய்ப்புகள் உள்ளன. அனகாபுத்தூரில் உள்ள அரசு நிலங்களையும் பெரும் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள இடத்தையும் இதற்குப் பயன்படுத்த வேண்டும்.

சிந்தாதிரிப்பேட்டை ஐந்து குடிசைப் பகுதிகளில் மாநில அரசு ஏற்கெனவே கல்நார் வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளது. அதை தற்போது அகற்றுகிறது. இங்கும் ஆற்றின் மையப் பகுதியிலிருந்து 50 மீட்டர் தூரத்தைக் கடந்து மீதமுள்ள இடத்தில் இப்பகுதி மக்களுக்கு அங்கேயே வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். இது சாத்தியமானதுதான். அருகில் நெடுஞ்செழியன் காலனி என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு இவ்வாறு கட்டப்பட்டுள்ளது.

வேலை, கல்வி, சமூக உறவுகள் பாதிக்காத வகையில் மூன்று முதல் 5 கிலோ மீட்டர் எல்லைக்குள் மறுகுடியமர்த்தல் அமைய வேண்டும் என மறு குடியமர்த்தல் வழிகாட்டல்கள் இருக்கின்றன. இதை அரசு கடைப்பிடிக்க வேண்டும்.

2. அடையார் ஆறு மற்றும் கூவம் ஆற்றின் கரையில் 50 மீட்டர் கடந்து குடியிருக்கும் மக்களை இதே காரணத்தைக் காட்டி ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் இடித்துத் தள்ளுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சொந்த வீட்டு மக்களின் வாழ்விடங்களை அரசு அபகரித்து வசதி படைத்தவர்களுக்கும் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் கொடுப்பது சட்டவிரோதமானது. இதை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

சென்னையில், நகர்ப்புற ஏழைகள், குடிசைவாழ் மக்கள் பெரும்பகுதி உள்ளனர். மாநில அரசு இவர்களின் பாதுகாவலனாக இருக்க வேண்டும் என மாநில அரசை வலியுறுத்துகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!