வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி! புதுச்சேரி அரசுத் திட்டம்

டிசம்பர் மாதம் இறுதியில் புதுச்சேரியிலிருந்து சென்னை, சேலம் ஆகிய இரு வழித்தடங்களில் விமான சேவை தொடங்கயிருக்கிறது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, ``புதுச்சேரி மாநிலமும் சென்னைத் துறைமுகமும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி புதுச்சேரி துறைமுகத்தில் சரக்குகளைக் கையாளுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரியிலிருந்து, தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு சரக்குகளை அனுப்புவதற்கு, கப்பல் நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. புதுச்சேரியிலிருந்து சென்னை மற்றும் சேலம் ஆகிய இரு வழித்தடங்களில் ஒடிஷா ஏர்லைன்ஸ் நிறுவனம், டிசம்பர் மாதம் இறுதியில் விமான சேவையை தொடங்க இருக்கிறது. அதேபோல, திருப்பதி, பெங்களூரு மற்றும் கொச்சினுக்கும் விரைவில் விமான சேவை தொடங்க இருக்கிறது.

டிசம்பர் மாதம் முதல் இளம் வழக்கறிஞர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 9 லட்ச ரூபாய் செலவாகும். இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு முதல் அரசுத் திட்டமாக செயல்படுத்தப்படும். புதுச்சேரியில் கடந்த காலங்களில் மாற்றுத் திறனாளிகள் தொழில் தொடங்க வாங்கிய 8.5 கோடி கடன் தொகையைத் தள்ளுபடி செய்ய மத்திய அரசுக்கு கடிதம் எழுத இருக்கிறேன். புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டை போக்குவதற்காகத் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் புதுச்சேரிக்கு மணல் வழங்க வேண்டுமென்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தேன். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு மணல் தருவதாக உறுதியளித்தது. ஆனால், இதுவரை மணல் தரவில்லை. அதனால் புதுச்சேரியில் நிலவும் மணல் தட்டுபாட்டைப் போக்க வெளிநாடுகளிலிருந்து மணலை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!