வெளியிடப்பட்ட நேரம்: 15:53 (02/12/2017)

கடைசி தொடர்பு:16:19 (02/12/2017)

ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம்... கிடுக்குப்பிடியில் ப.சிதம்பரம்... பின்னணி என்ன?

ஏர்செல் மேக்சிஸ்

ர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் உறவினர் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று (01-12-2017) சோதனை நடத்தினர். இந்தச் சோதனையானது, சென்னையில் நான்கு இடங்களிலும், கொல்கத்தாவில் இரண்டு இடங்களிலிலும் நடைபெற்றது. இதனால், ப.சிதம்பரத்துக்கான மத்திய அரசின் பிடி இறுக ஆரம்பித்துள்ளது. 

சிதம்பர சிக்கலுக்கு என்ன காரணம்?

ப.சிதம்பரம்

சென்னை திருவான்மியூர் ஸ்ரீராம் நகரில் உள்ள ஸ்ரீசுஜே சாமமூர்த்தி என்பவரின் மீடியா மேக்னெட் பிசினஸ் சர்வீஸ் என்ற அலுவலகத்திலும், ஆழ்வார்பேட்டையில் உள்ள ராம்ஜி நடராஜனின் டிராவல் மாஸ்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலும், தேனாம்பேட்டையில் உள்ள சடயாவேல் கைலாசம் என்பவரின் இல்லத்திலும் அவென்யூ செளந்தரா மருத்துவமனையிலும், கொல்கத்தாவில் உள்ள ஸ்ரீமனோஜ் மோகன் ஹாவின் வீடு, அலுவலகத்திலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இவை அனைத்தும் ப.சிதம்பரத்தைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் என்று சொல்லப்படுகிறது. சிதம்பரத்துக்கான நெருக்கடி, ஏர்செல் - மேக்சிஸ் வழக்கினால் ஏற்பட்டுள்ளது. 

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு!

சென்னையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சிவசங்கரன். அவர், ஏர்செல் என்ற செல்போன் சேவை நிறுவனத்தை ஆரம்பித்தார். கடந்த 2006-ம் ஆண்டு மத்தியில் நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஏர்செல் நிறுவனம் மலேசியாவைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமான மேக்சிஸ் நிறுவனத்துக்குக் கைமாறியது. மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூபாய் 3,500 கோடி முதலீடு செய்தது. இது, மத்தியப் பொருளாதார விவகாரங்களின் அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் பெறாமல் அனுமதிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

இந்த வழக்கை அமலாக்கத் துறையும் கையில் எடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதற்குக் காரணம் ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில், மூன்றாயிரத்து 500 கோடி ரூபாய் வெளிநாட்டு வர்த்தகமாக நடந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து இத்தனை கோடி ரூபாய் இந்தியாவுக்குள் வர விதிமுறைகள் இருக்கின்றன. அதாவது, அந்நிய முதலீடுகள் ரூபாய் 600 கோடி வரைக்குமே அனுமதிக்க மத்திய நிதி அமைச்சரின்கீழ் இயங்கும் முதலீட்டு மேம்பாட்டு வாரியத்துக்கு அனுமதி உள்ளது. அந்நிய முதலீடுகள் ரூபாய் 600 கோடிக்கும் மேல் இருந்தால், மத்தியப் பொருளாதார அமைச்சரவைக் குழுவின் அனுமதியைப் பெற வேண்டும். இந்த அனுமதியைப் பெறாமலேயே இவ்வளவு பெரிய தொகையை மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது.

கார்த்தி சிதம்பரம்

மேக்சிஸ் முதலீடு காலகட்டத்தில் மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இந்தப் பரிவர்த்தனைகளுக்கு உதவியுள்ளார். குறிப்பாக, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நடத்திய நிறுவனம்தான் மேக்சிஸ் நிறுவன முதலீட்டுக்கு உதவி செய்து, பெரும் ஆதாயமடைந்ததாகப் புகார்கள் வந்தன. இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ நீதிமன்றம், 'வழக்கில் முகாந்திரம் இல்லை' என்று தீர்ப்பளித்தது. அதனால், சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகிய இரண்டும் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த முறையீடு காரணமாகவே அமலாக்கத் துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். அதன் முதல்கட்டமாக நேற்று (01-12-2017) சென்னை மற்றும் கொல்கத்தாவில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடுகள் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


டிரெண்டிங் @ விகடன்