கார்த்திகை மாத சிறப்பு அபிஷேக ஆராதனைக்குத் தயாராகும் அகோரமூர்த்தி!

நாகை மாவட்டம், சீர்காழி, திருவெண்காட்டில் அமைந்துள்ளது சுவேதாரண்யேஸ்வரர் கோயில். இதன் மூலவரான அகோரமூர்த்திக்கு நாளை (3.12.17) சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற உள்ளது. சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு என்பது ஐதிகம். அவை ஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம், அகோரம். இவற்றில் முதல் நான்கு முகங்களை வழிபாடு செய்ய இயலாது. ஆனால், ஐந்தாவது முகமான அகோர முகத்தை நம்மால் வழிபட இயலும்.`கோரம்' என்றால் பயங்கரம். அதுவே `அகோரம்' என்றால் `அழகிய' என்று பொருள். இந்த அகோர முகத்துடன் சிவபெருமான் அருள்பாலிக்கும் இடம்தான் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயம். இவ்வாலய சிவபெருமானுக்கு `அகோர மூர்த்தி' என்று பெயர்.

அகோரமூர்த்தி

மருத்துவாசுரன் என்ற அரக்கன், தவமிருந்து சிவனிடம் வரமாகப் பெற்ற சூலத்தைக் கொண்டு விண்ணுலக தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். இதைத் தடுக்க நினைத்த சிவபெருமான், அரக்கனிடம் தனது வாகனமான நந்தியை அனுப்பி வைத்தார். நந்தியின் அறிவுரையை அரக்கன் கேட்க மறுத்ததால் இருவரிடையே சண்டை ஏற்பட்டது. இதில் நந்தியின் கொம்பு முறிந்தது. மேலும், நந்தியின் உடலில் 9 இடங்களில் காயம் ஏற்பட்டது. 

இதனால், கோபமுற்ற சிவபெருமான் அரக்கன் முன்பு தோன்றினார். அப்போது அவருடைய உருவம் கரிய நிறத்தில் இருந்தது. 14 பாம்புகளைத் தன் மேல் உடுத்தி, மணிமாலை அணிந்து, எட்டு பைரவர்களுடன் அகோரமூர்த்தியாக அருள்பாலித்தார். இதைக் கண்ட அரக்கன் சரணடைந்தான்.மேலும், அகோரமூர்த்தியிடம் தங்களை வழிபடும் பக்தர்களுக்கு நவகிரக தோஷம், பித்ரு தோஷம் , யமபயம் நீக்கி அருளும்படி வேண்டினான். இறைவனும் அவனது வேண்டுதலை ஏற்று அருள்பாலித்து வருகிறார். அகோரமூர்த்தியை வழிபட்டால்
8 பைரவர்களை வழிபட்ட பலன் கிடைக்கும்.

இத்தகைய சிறப்புகளைக்கொண்ட சிவபெருமான் வீற்றிருக்கும் இவ்வாலயத்தில், கார்த்திகை மாத 3 வது நாளான நாளை அகோரமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது. நாளை (3.12.17) மாலை 6 மணியிலிருந்து 11 மணிவரை சிறப்பு பூஜைகளும் சந்தனக் காப்பு அலங்காரமும் அதைத் தொடர்ந்து இரவு 12 மணியளவில் தீப ஆராதனையும் நடைபெற உள்ளது. சிறப்புத் தேவார இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்வாலயம் நவகிரகப் பரிகாரத் தலங்களில் கல்விக்கு அதிபதியான புதனுக்கு உரிய தலமாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!