வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (02/12/2017)

கடைசி தொடர்பு:17:40 (02/12/2017)

கன்னியாகுமரி மீட்புப் பணிக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு - முதல்வர் உத்தரவு

கன்னியாகுமரியில் நடைபெறும் மீட்புப் பணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 25 கோடி ரூபாய் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். 


கன்னியாகுமரி அருகே 30-ம் தேதியில் கடந்து சென்ற ‘ஒகி’ புயல் காரணமாக ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மிகக் கனமழையால், கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சாலைகள், நெடுஞ்சாலைகள் எனப் பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து, அதனால் மின்சார உள்கட்டமைப்புகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கன மழையின் காரணமாகச் சாலைகளும் சேதமடைந்துள்ளன.  
நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேலும் துரிதப்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 25 கோடி ரூபாய் உடனடியாக விடுவித்திட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சேதமடைந்துள்ள மின் உள்கட்டமைப்புகளை விரைவில் சீர் செய்து, தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டும், மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சிகள்துறை, பேரூராட்சிகள்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகிய துறைகளுக்கு 25 கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்படும். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணியில், பல்வேறு துறையினரை ஒருங்கிணைத்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்பிட வழி வகை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.