வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (02/12/2017)

கடைசி தொடர்பு:18:00 (02/12/2017)

செய்யாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்! உடையும் நிலையில் உத்திரமேரூர் தரைப்பாலம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்த வடகிழக்குப் பருவமழையில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. உத்திரமேரூர் பகுதியில் உள்ள அணையிலிருந்து 4,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையிலிருந்து உத்திரமேரூர் கால்வாய் வழியாக உத்திரமேரூர் ஏரிக்கு 1,500 கனஅடி தண்ணீரும் செய்யாற்றுக்கு 3,000 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள தரைப்பாலம் உடையும் அபாயத்தில் உள்ளது.

காஞ்சிபுரம், வெள்ளம்

மாவட்ட ஆட்சியர் பொன்னையா, உத்திரமேரூர் எம்.எல்.ஏ சுந்தர் ஆகியோர் இன்று அப்பகுதியைப் பார்வையிட்டனர். இதையடுத்து செய்யாற்றின் கரையோரப் பகுதியில் உள்ள மாகரல், கீழ்புத்தூர், வள்ளிமேடு, கம்மராஜபுரம், அங்கம்பாக்கம், சிலாம்பாக்கம், ஒழுகரை, மடம், வெங்கச்சேரி, ஆதவபாக்கம், காவாம்பயிர், இருமரம், நெய்யாடுபாக்கம், வயலக்காவூர், புல்லம்பாக்கம், திருமுக்கூடல் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

“கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையில் இந்தத் தரைப்பாலம் உடைந்தது. ஆனால், இதுவரை இந்தப் பாலம் சரிசெய்யப்படவில்லை. முக்கியப் பிரச்னையைப் பாலத்தை சரிசெய்யாமல் தடுப்பணை கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். நிதி ஒதுக்கியும் தடுப்பணை கட்டும் பணியும் மந்தமாக நடைபெறுகிறது. இந்தத் தரைப்பாலம் உடைவதற்கு வாய்ப்பு உள்ளதால் வருவாய்த்துறையினர் மணல் மூட்டைகளோடு தயாராக இருக்கிறார்கள். வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் இந்தப் பாலம் தற்காலிகமாகவே சரிசெய்யப்படுகிறது'' என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டால் ஆரணி, செய்யாறு, பாலாற்றின் மூலமாக இப்பகுதிக்குத் தண்ணீர் வரவாய்ப்புள்ளது. உத்திரமேரூர் பெரிய ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் செய்யாற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். அந்தப் பாலத்தைத் தற்காலிகமாகச் சீர்செய்யாமல், நிரந்தரப் பாலம் கட்டித் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க